Published : 10 Jun 2018 08:53 AM
Last Updated : 10 Jun 2018 08:53 AM

கேரளாவில் இதுவரை 17 பேர் பலி; நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை- மத்திய இணையமைச்சர் உறுதி

நிபா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி நாடு முழுவதும் நிபா வைரஸ் அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நிபா வைரஸால் 17 பேர் உயிரிழந்தது உண்மைதான். எனினும் அந்த வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை. இறந்தவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. எனவே நிபா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம். மத்திய சுகாதாரத் துறையின் குழு கேரளாவில் முகாமிட்டு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இவ்வாறு இணையமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்தார்.

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அந்த மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பயணிகளிடம் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x