Published : 06 Jun 2018 03:32 PM
Last Updated : 06 Jun 2018 03:32 PM

மக்களவை தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டி: அமித் ஷா சந்திப்புக்கு முன்பே அதிரடியாக அறிவித்த உத்தவ் தாக்கரே

கோபத்தில் உள்ள உத்தவ் தாக்கரேயை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் அவரை அமித் ஷா இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக சிவசேனா அதிரடியாக அறிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா இடம் பெற்றுள்ள போதிலும், இருகட்சிகளிடையே சுமூகமாக உறவு இல்லை. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி, சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல் வரை இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன.

பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், சிவசேனா இரண்டாவது இடத்தை கைபற்றியது.

சமீபத்திய இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா, இன்று மாலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் சந்தித்து பேசவுள்ளார். உத்தவ் தாக்கரேயின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

பாஜக மீது அதிருப்தியில் உள்ள உத்தவ் தாக்கரேயை சமரசம் செய்யும் நோக்குடன் அவரை அமித் ஷா சந்தத்து பேச உள்ளார். வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில் மகாராஷ்டிராவில் வாக்கு இழப்பை தடுக்கும் பொருட்டு சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக விரும்புகிறது. அதற்கான முன்னேற்பாடாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘பால்கர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின் பாஜக மக்கள் தொடர்பு இயக்கத்தை நடத்துகிறது. மக்களுடனான தொடர்பை இழந்து விட்டதால் தான் பாஜகவுக்கு இந்த நிலை. ஆனால் சிவசேனா எப்போதுமே மக்களுடன் மக்களாக இருக்கும் கட்சி. அந்த கட்சிக்கு இதுபோன்ற அவல நிலை இல்லை. இது மக்களுக்கான கட்சி. தேர்தலுக்காக மக்களை சென்று பார்க்க வேண்டிய அவசியம் சிவசேனாவுக்கு இல்லை.

பால்கர் இடைத்தேர்தலிலேயே இது தெரிந்து விட்டது.

பாஜக சுவரொட்டிகளில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷாவின் படம் இல்லை. ஆனால், பாஜக முன்னாள் எம்.பியும், சிவசேனா வேட்பாளரின் தந்தையுமான வங்காவின் படத்தை பிரசுரித்து பாஜக வாக்கு கேட்டது. தேர்தலுக்காக கொள்கைகளை மாற்றும் கட்சி சிவசேனா அல்ல. பாஜகவின் கூட்டணியி்ல் இருந்த சந்திரபாபு நாயுடு வெளியேறிவிட்டார்.

எப்போது வெளியேறலாம் என பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் காத்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகளின் நிலைமை இதுதான். நண்பர்களை பற்றி கவலைப்படாத பாஜகவுடன் தொடர்ந்து பயணம் செய்ய எந்த கட்சிகளுக்கும் விருப்பமில்லை. வரும் மக்களவை தேர்தலில் சிவசேனா தனது சொந்த காலில் நிற்கும். தனித்து போட்டியிட்டு பெரும் வெற்றி பெறும்’’ எனக் சாம்னா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x