Published : 18 Jun 2018 02:29 PM
Last Updated : 18 Jun 2018 02:29 PM

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: மூன்றாவது அணி சார்பில் பிஜூ ஜனதாதள வேட்பாளர்? - காங்கிரஸூக்கு ‘செக்’ வைக்கும் மாநில கட்சிகள்

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, மூன்றாவது அணியின் சார்பில் பிஜூ ஜனதாதம் சார்பில் வேட்பாளரை களமிறக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் காங்கிரஸ் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ் வலிமையாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு மாநில கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனால் இதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்றவர்கள் ஒரணியாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவையும், காங்கிரஸையும் விரும்பாத ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்களையும் தங்கள் அணியில் இணைக்க மாநில கட்சித் தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

டெல்லியில் ஆளுநரின் அதிகாரம் மற்றும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முதல்வர்அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து அவரை, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சந்திக்க சென்று ஆதவு தெரிவித்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே குரியனின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த பதவி காங்கிரஸ் வசம் உள்ளது. காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் கேரளா காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்கும் பொருட்டு ஆளும் பாஜக கூட்டணியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெறுவதன் மூலம் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

ஆனால் இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மூன்றாவது அணி தலைவர்கள் புதிய திட்டத்தில் உள்ளனர். பாஜக மற்றும் காங்கிரஸை நிராகரிக்கும் அனைவரையும் ஒரணியில் திரட்ட இந்த தேர்தலை பயன்படுத்தி அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கேஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது, தனித்து செயல்படும் நவீன் பட்நாயக் போன்றவர்களை தங்கள் அணிக்கு இழுக்கும் விதமாக, பிஜூ ஜனதாதளத்தின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது எனவும், அதற்கு மாநில கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவிப்பது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டும் வேலை தற்போது நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி பதவியேற்றபோது, அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் நவீன் பட்நாயக் தவிர்த்தார். அதுபோலவே கேரள முதல்வர் பினராயி விஜயனும் காங்கிரஸ், பாஜக என இருகட்சிகளையும் எதிர்த்து வருகிறார். எனவே மூன்றாவது அணியில் இடதுசாரி கட்சிகள் உட்பட பிற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.

245 எம்.பிக்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 69 எம்.பிக்களும், இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸூக்கு 51 எம்.பிககளும் உள்ளனர். மாநில கட்சிகளின் முடிவே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x