Last Updated : 05 Jun, 2018 04:01 PM

 

Published : 05 Jun 2018 04:01 PM
Last Updated : 05 Jun 2018 04:01 PM

ராமர் கோயில் கட்ட வேண்டும்: பாஜகவுக்கு இந்து யுவா வாஹினி எச்சரிக்கை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டா விட்டால் பாஜகவுடனான உறவு முறியும் என இந்து யுவ வாஹினி அமைப்பின் தலைவர் சுனில்சிங் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நேற்று லக்னோவின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து யுவா வாஹினியின் தலைவர் சுனில்சிங் கூறியதாவது: ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாக வாக்குறுதி அளித்து பாஜக உபியின் ஆட்சிக்கு வந்தது. பொது சிவில் சட்டம் அமலாக்குவதாகவும் கூறி இருந்தது. ஆனால், இந்த விஷயங்களில் பாஜக அதிக மெத்தனம் காட்டுகிறது. இது நாட்டு மக்களுக்கு பாஜக செய்யும் துரோகம் ஆகும்.

நாம் பொதுமக்களை சந்திக்க செல்லும் போது அவர்கள் எங்களிடம் பாஜகவின் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு எங்களால் பதில் சொல்ல முடியாமல் உள்ளது. இந்த சூழல் தொடர்ந்தால் பாஜகவுடனான உறவை இந்து யுவா வாஹினி முறித்துக் கொள்ளும்.

இதுபோன்ற விஷயங்களில் பாஜக தம் செல்வாக்கை இழந்து வருவதால் இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்து வருகிறது. ராமர் கோயில் கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை என்றால், பாஜகவிற்கு 2019 மக்களவை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் உபியில் தொகுதிகள் கிடைக்காது’’ என சுனில்சிங் தெரிவித்தார்.

உபியில் பாஜக ஆளும் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத். கோரக்பூரின் கோரக்நாத் மடாதிபதியான இவர் அந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர். அப்போது, யோகி, இந்து இளைஞர்களை ஒன்றிணைக்க இந்து யுவா வாஹினி எனும் அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.

தற்போது யோகி உபி முதல்வரான பின் அவரது அமைப்பை தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்த சுனில்சிங், இந்து யுவா வாஹினியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x