Published : 28 Jun 2018 07:38 AM
Last Updated : 28 Jun 2018 07:38 AM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 7 போலீஸார் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 7 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டம் சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநில காவல் துறையின் சிறப்பு பிரிவான ஜாகுவார் படையினர் அங்கு விரைந்து சென்றனர். கார்வா - லதேகார் மாவட்ட எல்லையில் உள்ள புதா பகத் வனப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, ஏற்கெனவே புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். மேலும் சிறப்பு படை போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் சிறப்பு படை போலீஸார் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

மோசமான வானிலை காரணமாக, காயமடைந்த வீரர்களை நேற்று முன்தினம் இரவு மீட்க முடியவில்லை. இதையடுத்து இவர்கள் நேற்று காலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் காவல்துறை இயக்குநர் டி.கே.பாண்டே நேற்று கூறும்போது, “புதா பகத் பகுதியிலிருந்து மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை அவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். அங்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்” என்றார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர்தாஸ் நேற்று வெளியிட்ட செய்தியில், “நமது வீரர்கள் மீது கோழைத்தனமாக தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதத்தை வேரறுப்போம். இதுவே இந்த தியாகிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்று கூறியுள்ளார்.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 24 மாவட்டங்களில் 18-ல் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x