Published : 07 May 2018 08:42 AM
Last Updated : 07 May 2018 08:42 AM

கர்நாடகாவை காங். சூறையாடுகிறது: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

கர்நாடகாவை காங்கிரஸ் சூறையாடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சித்ரதுர்கா, ராய்ச்சூர், ஹுப்ளி, ஜமாகண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கர்நாடக மண்ணின் மைந்தர்கள் வீரமதகரி, ஒனக்கே ஒபவ்வா ஆகியோரை காங்கிரஸ் அரசு மறந்துவிட்டது. அவர்களின் பிறந்த நாளை அரசு கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக சுல்தான்களின் பிறந்த நாளை கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது. வாக்குவங்கி அரசியலுக்காக திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு கோலாகலமாக கொண்டியுள்ளது. இதன்மூலம் கர்நாடக மக்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது. யாரை நினைவில் கொள்ள வேண்டும். யாருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது அந்த கட்சிக்கு தெரியவில்லை.

மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது எல்இடி விளக்குகள் ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டன. இப்போது எங்களது ஆட்சியில் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு என்ன சாதித்தது என்று கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் இல்லை. அதற்குப் பதிலாக என்னை குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலனில் காங்கிரஸுக்கு அக்கறையில்லை. நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.

நமது நாட்டின் குடியரசுத் தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். நேரு காலம் முதலே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது.முதல்வர் சித்தராமையாவின் வீட்டுக்கு 24 மணி நேரமும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு அணைகளை கட்டியுள்ளது. ஆனால் கர்நாடக காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யவில்லை. வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக வாக்குகளை கோருகிறது. அதற்கு நேர்மாறாக வளர்ச்சியின்மையை முன்னிறுத்தி காங்கிரஸ் வாக்கு சேகரித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடகாவை காங்கிரஸ் சூறையாடியுள்ளது. அவர்கள் ஆட்சியில் நீடித்தால் கர்நாடகாவை தொடர்ந்து சூறையாடுவார்கள். ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்கள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று கூறுகிறார்கள். பாஜக பிரச்சார கூட்டங்களுக்கு வரும் மக்கள் வெள்ளத்தை பார்த்தால் அவர்களுக்கு உண்மை புரியும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x