Last Updated : 31 May, 2018 05:00 PM

 

Published : 31 May 2018 05:00 PM
Last Updated : 31 May 2018 05:00 PM

‘இடைத்தேர்தல் முடிவுகள் மோடி அரசின் மீதான மக்களின் கோபத்தை காட்டுகிறது’: முதல்வர் கேஜ்ரிவால் பளீர்

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலின் முடிவுகள், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை காட்டுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

4 மக்களவைத் தொகுதிகளுக்கும், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த திங்கள்கிழமை இடைத் தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் மகாராஷ்டிராவில் போல்கர் மக்களவைத் தொகுதி, உத்தரகாண்டில் தராலி சட்டப்பேரவைத் தொகுதி ஆகிய இரண்டில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. பீகார், கர்நாடகம், உபி, பஞ்சாப், மேகாலயா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது.

பாஜகவின் இந்த தோல்வி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்து இருப்பதாவது:

நாடுமுழுவதும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக மக்கள் ஏராளமான கோபத்துடன் இருக்கிறார்கள் என்பதையே இடைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது. இப்போதுவரை பிரதமர் மோடிக்குப் பதிலாக யாரை அடுத்த தேர்தலில் பிரதமராக்கலாம், மாற்று யார் என்பதைச் சிந்தித்து வருகிறார்கள். மக்களைப் பொறுத்தவரை மோடியை ஆட்சியில் இருந்து முதலில் அகற்ற வேண்டும் என விரும்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டில் கேஜ்ரிவால் கூறுகையில், நன்கு கல்வி கற்ற பிரதமரான மன்மோகன் சிங் போன்றோரை மக்கள் இழந்துவிட்டார்கள். மக்கள் விழிப்புணர்வு பெற்று எழுந்துவிட்டார்கள், பிரதமர் நன்கு படித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இலக்காக வைத்து கேஜ்ரிவாலின் ஊழல் ஒழிப்பு பிரச்சாரம் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அந்த நேரத்தில் 2ஜி, நிலக்கரி ஊழல், காமென்வெல்த் ஊழல் போன்றவை இருந்ததால், அதைக் குறிப்பிட்டு கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். ஆனால், தற்போது மன்மோகன் சிங்கை பெருமைப்படுத்தி கேஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாக விமர்சித்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் அவரின் கல்விச் சான்றிதழ் கேட்டு மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியின் தண்ணீர் பிரச்சினை குறித்து மோடியைச் சாடியுள்ள கேஜ்ரிவால் அது குறித்த ட்வீட்டில், டெல்லி மக்களின் தண்ணீர் விஷயத்தில் அசிங்கமான அரசியல்செய்கிறது பாஜக. ஹரியானாவில் இருந்து 22 ஆண்டுகளாக நீரைப் பெற்றுவருகிறது டெல்லி. ஆனால் திடீரென, தற்போதைய பாஜக அரசு ஹரியானாவில் இருந்து வரும் தண்ணீரின் அளவைக் குறைத்துள்ளது. ஏன் குறைத்தார்கள். உங்களின் அசிங்கமான அரசியலில் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x