Last Updated : 29 May, 2018 04:54 PM

 

Published : 29 May 2018 04:54 PM
Last Updated : 29 May 2018 04:54 PM

ஆர்டிஐயில் அம்பலம்: மோசடி மூலம் 21 அரசு வங்கிகளுக்கு ஒரே ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடி மக்கள் பணம் இழப்பு

கடந்த 2017-18-ம் ஆண்டில் 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம் மக்களின் பணம் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த மனு மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்த பெற்ற அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் கடந்த 2017-18-ம் ஆண்டில் அரசு வங்கிகளுக்கு வங்கி மோசடி மூலம் ஏற்பட்ட இழப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரின் மனுவுக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி, எந்தெந்த வங்கியில் என்னவிதமான மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து தெரிவிக்காமல், ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரத்தை மட்டும் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ரிசர்வ் வங்கி கடந்த 15-ம் தேதி சந்திரசேகர் கவுட்டுக்கு அளித்துள்ளது.

அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கடந்த 2017-18ம் நிதியாண்டில், அதாவது கடந்த மார்ச் 31-ம் தேதிவரையில், 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம் ஒரு ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரின் மோசடி குறித்து இதில் குறிப்பிடவில்லை.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 390.75கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2 ஆயிரத்து 224.86 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.ஆயிரத்து 928.25 கோடியும், அலஹாபாத் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 520.37 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ. ஆயிரத்து 303.30 கோடியும், யூசிஓ வங்கிக்கு ரூ.ஆயிரத்து 224.64 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கிக்கு மோசடி மூலம் ரூ.ஆயிரத்து116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 95.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 84.50 கோடியும், பேங்க் ஆப் மஹாராஷ்டிராவுக்கு ரூ.ஆயிரத்து 29.23 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.ஆயிரத்து15. 79 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தவிர கார்பரேஷன் வங்கிக்கு ரூ.970.89 கோடியும், யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.880.53 கோடியும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு ரூ.650.28 கோடியும், சின்டிகேட் வங்கிக்கு ரூ.455.05 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மோசடி காரணமாக கனரா வங்கிக்கு ரூ.190.77 கோடியும், சிந்த் வங்கிக்கு ரூ.90.01 கோடியும், தீனா வங்கிக்கு ரூ.89.25 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.28.58 கோடியும், இந்தியன்வங்கிக்கு ரூ.24.23 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல் சென்றால் கூட அதைக்கூட மோசடி கணக்கில் எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை மோசடிகள் நடந்துள்ளன, எந்த வங்கியில் அதிகபட்சமாக மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.''

இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார்.

இது குறித்து பொருளாதார நிபுணர் ஜெயந்திலால் பண்டாரி கூறுகையில், ''21 அரசு வங்கிகள் மோசடி மூலம் மக்களின் பணம் ரூ.26 ஆயிரம் கோடியை இழந்துள்ளது வேதனைக்குரியது. வங்கிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை மட்டும் சந்திக்கவில்லை, எதிர்காலத்தில் உண்மையான பணத்தேவை உள்ள மக்களுக்கும் கடன் கொடுக்க முடியாத சூழலையும் உருவாக்கி எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்துக்கு இதுபோன்ற சூழல் ஆரோக்கியமானது அல்ல'' எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x