Last Updated : 07 May, 2018 08:46 AM

 

Published : 07 May 2018 08:46 AM
Last Updated : 07 May 2018 08:46 AM

கர்நாடகாவில் நாளை முதல் சோனியா பிரச்சாரம்: 2 ஆண்டுக்குப்பின் அரசியல் களம் காண்கிறார்

அரசியலில் ஒதுங்கியிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்துக்கு வருகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக, மஜத கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளன. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு போட்டியாக‌ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாஜகவின் நட்சத்திர பிரசாரத்துக்கு காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. எனவே காங்கிரஸ் மேலிடம் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை களமிறக்க முடிவெடுத்துள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியை காங்கிரஸ் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதால் இந்த பிரச்சாரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சோனியா காந்தி கடந்த‌ 2016 ஆகஸ்டில் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார். அதன் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்தார்.

உடல் நிலையை கருத்தில் கொண்டு குஜராத், திரிபுரா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா தேர்தல்களில் அவர் பிரச்சாரம் செய்யவில்லை. அதன் பிறகு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியதால், ராகுல் காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்த சோனியா, கர்நாடக தேர்தலில் களமிறங்குகிறார்.

வரும் 8-ம் தேதி பிஜாப்பூரில் உள்ள சரவாடா கிராமத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா பங்கேற்று உரையாற்றுகிறார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அவரின் வருகை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா பிரச்சாரம் செய்யும் அதே நாள் காலையில் பிஜாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x