Published : 12 Aug 2024 06:08 AM
Last Updated : 12 Aug 2024 06:08 AM
புதுடெல்லி: அனைத்து பருவநிலைகளையும் தாங்கி வளரும் 109 புதிய பயிர் வகைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். இந்த புதிய பயிர்களின் விதைகள் அடுத்த 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் 109 புதிய பயிர் வகைகளை கண்டுபிடித்துள்ளது. இவை அனைத்து பருவநிலைகளையும் தாங்கி வளரக்கூடியவை. குறைந்த செலவில், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியவை. இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், சிறுதானிய வகைகளை சேர்ந்த 34 பயிர்கள், 27 தோட்டப் பயிர்கள் உட்பட 109 புதிய பயிர் வகைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். புதிய வகை கரும்பு,பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, மூலிகை செடிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விழாவின்போது, விவசாயிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இயற்கை வேளாண்மை குறித்த விவசாயிகளின் அனுபவங்கள், கருத்துகளையும் அவர் கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி கூறும்போது, “இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்யப்படும் தானியங்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். அவற்றின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.எனவே, இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் தீவிர கவனம்செலுத்த வேண்டும். புதிதாக கண்டுபிடிக்கப்படும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் வேளாண் விஞ்ஞானிகள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுதொடர்பாக மாதம்தோறும் விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “பிரதமர் தற்போது அறிமுகம் செய்துள்ள 109 புதிய பயிர்களின் விதைகள் அடுத்த 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த புதிய ரகங்களுக்கான சாகுபடி செலவு மிக குறைவாகவும், மகசூல் அதிகமாகவும் இருக்கும். இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் பெருகும். வெளிநாட்டு மாம்பழ வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய அவசியம் இல்லை. இந்திய மாம்பழ வகைகள் நல்ல மகசூலை தருகின்றன. சந்தையிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
தமிழகத்துக்கு ஏற்ற பயிர்கள்: நேற்றைய விழாவில், ‘கல்ப சுவர்ணா’, ‘கல்ப சதாப்தி’ ஆகிய 2 புதிய தென்னை மரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் கல்ப சுவர்ணா, உயரம் குறைந்த தென்னை மரம் ஆகும். இது இளநீர், கொப்பரை தேங்காய் உற்பத்திக்கு ஏற்றது. ஆண்டுக்கு 130 இளநீர் தேங்காய்கள் கிடைக்கும்.
கல்ப சதாப்தி என்பது உயரமான தென்னை மரம், பெரிய தேங்காய் வகையை சேர்ந்தது. இந்தமரத்தில் ஓராண்டில் 148 தேங்காய்கள் கிடைக்கும். இந்த 2 ரகங்களையும் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘சிஆர் தான் 416’ என்ற புதிய நெல் வகை, உப்புத்தன்மை மிகுந்த கடலோர பகுதிகளிலும் செழித்து வளரக்கூடியது. 125 நாட்களில் அறுவடை செய்ய முடியும். ஒரு ஹெக்டேருக்கு 48.97 குவின்டால் மகசூல் கிடைக்கும்.
புதிய வகையான ‘துரம்’ கோதுமை பயிர், தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் பயிரிட ஏற்றது. இது கடும் வெப்பத்தையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. ஒரு ஹெக்டேருக்கு 30.2 குவின்டால் மகுசூல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய வேளாண்துறை வட்டாரங்கள் கூறும்போது, “இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க என்எம்எஸ்ஏ என்றதிட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி புதியபயிர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மண்வளம் காப்பது, ஊட்டச்சத்தான சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிப்பது தொடர்பாகவும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்தன.
இயற்கை விவசாயத்துக்கு ஆதரவு: இதற்கிடையே, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 109 புதிய பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை அதிக மகசூல்தரும் பயிர் வகைகள். அனைத்து கால சூழலையும் தாங்கி வளரக்கூடியவை. புதிய பயிர் வகைகளால் விவசாயிகளின் வருவாய்பெருகும். இயற்கை வேளாண்மையின் நன்மைகள் குறித்து விவசாயிகளோடு விரிவாக ஆலோசித்தேன். அவர்களும் என்னுடன் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் தற்போது அதிக ஆர்வம் காட்டுவது மிகவும் திருப்தி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT