Last Updated : 03 May, 2018 01:57 PM

 

Published : 03 May 2018 01:57 PM
Last Updated : 03 May 2018 01:57 PM

ரயில் கழிவறை நீரை டீ, காபியில் கலந்த விவகாரம்: கான்ட்ராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ரயில் கழிவறை நீரைப்பிடித்து, தேநீர், காபி சப்ளை செய்யும் கேனில் கலந்தது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது. இதற்கு காரணமாக இருந்த ஐஆர்சிடிசி உணவு தயாரிப்பு கான்ட்ராக்ட்டருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ரயில்வே தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதில் ரயில்வே ஐஆர்சிடிசியில் உணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் ரயில் கழிவறை நீரை தேநீர், காபி தயார் செய்வதற்காக கேனில் பிடித்து கொண்டு செல்வது போன்ற காட்சி ஒளிபரப்பானது.

மேலும், இந்த காட்சியைக் கண்ட ரயில் பயணி ஒருவர், எதற்காக கழிவறை நீரை தேநீர் கேனில் பிடித்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எந்த தவறும் நாங்கள் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அவர்கள் நகர்வதும் பதிவானது.

இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினர் புகார்கள் தெரிவித்திருந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது, கழிவறை நீரை பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த ஊழியர்களை ஒப்பந்தம் செய்து வைத்திருந்த உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரர் காசிப்பேட் பி.சிவபிரசாத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து தென் மத்திய ரயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி எம் உமாசங்கர் குமார் கூறுகையில், ‘‘சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்தினோம்.

அதில் கழிவறை நீரை தேநீர் கேனில் பிடித்துச் சென்ற இரு ஊழியர்களும், காசிப்பேட் பி. சிவபிரசாத் என்ற ஒப்பந்ததாரிடம் பணியாற்றும் ஊழியர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, உணவுகளை சுகாதாரக்கேட்டுடன் தயாரித்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தண்ணீர் கலந்த அந்த இரு ஊழியர்களும், ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரஊழியர்கள் இல்லை. இதையடுத்து, அங்கீகாரமற்ற வகையில், செகந்திராபாத் ரயில்நிலையத்தில், விற்பனையில் ஈடுபட்டு இருந்த பலர் நீக்கப்பட்டுள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x