Last Updated : 10 May, 2018 08:29 AM

 

Published : 10 May 2018 08:29 AM
Last Updated : 10 May 2018 08:29 AM

அதிருப்தியில் உள்ள‌ கர்நாடக தமிழர்களை கவர தேர்தல் களத்தில் தமிழக‌ பாஜக தலைவர்கள்: பெங்களூருவில் வீதி வீதியாக பிரச்சாரம்

கர்நாடக தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை பெற, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

க‌ர்நாடகாவில் சுமார் 1 கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாக்குகளைப் பெற அதிமுக சார்பில் 4 தொகுதியிலும் காங்கிரஸ், மஜத, மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் தலா 1 தொகுதியிலும் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜக சார்பில் தமிழர் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படாததால், அக்கட்சி மீது கர்நாடக தமிழர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் தமிழர்களைச் சமரசப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களை அக்கட்சி மேலிடம் களமிறக்கியுள்ளது.

பெங்களூருவில் முகாமிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அங்குள்ள தமிழ் அமைப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அப்போது பாஜக ஆட்சி அமைந்தால் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர். இதேபோல பெங்களூருவில் உள்ள முக்கிய தமிழ் பிரமுகர்களையும், சாதி அமைப்பினரையும் பாஜகவுக்கு ஆதரவாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவாஜி நகர் தொகுதியின் பாஜக‌ வேட்பாளர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவை ஆதரித்து வீரபிள்ளை சாலை, திம்மையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.

இதேபோல முன்னாள் எம்பி. சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் சிவாஜிநகர், அல்சூர், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது எம்ஜிஆர் பாடல்களை இசைத்து பாஜகவினர் வாக்கு கேட்டதால், அங்கிருந்த அதிமுகவினர் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

கர்நாடகாவில் சுமார் 40 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் உள்ளதால் பாஜக அந்த வாக்குகளைக் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x