Published : 01 Aug 2024 07:22 PM
Last Updated : 01 Aug 2024 07:22 PM

1,550 மீ உயரம், 86,000 ச.மீ நிலம் - வயநாடு நிலச்சரிவு தாக்கத்தின் செயற்கைக்கோள் வரைபடங்கள்

ஹைதராபாத்: வயநாடு நிலச்சரிவின் செயற்கைக்கோள் வரைபடங்களை (மேப்) இஸ்ரோவின் ஓர் அங்கமான என்ஆர்எஸ்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளது, அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், வயநாடு நிலச்சரிவின் கோரத்தை விவரிக்கும் வகையில் அதன் செயற்கைக்கோள் வரைபடங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி நிலச்சரிவுக்கு முன்பு எப்படி இருந்தது, நிலச்சரிவுக்கு பின்பு எப்படி இருந்தது என்பதை தெளிவாக காட்டுகிறது.

இஸ்ரோவின் ஓர் அங்கமான ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC) கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் ரிசாட் செயற்கைக்கோளையும் பயன்படுத்தி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. அதே மையம் வெளியிட்ட கூடுதல் தகவலில், வயநாட்டின் முண்டக்கை பகுதிக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1,550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்துள்ளது. குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவனின் அளவை விட இது சுமார் ஐந்து மடங்கு அதிகம்.

இவ்வளவு பெரிய நிலத்தின் மணல் திட்டுகள் சுமார் 8 கி.மீ கீழே நோக்கி சரிந்து முண்டக்கை, சூரல்மலா போன்ற குடியிருப்பு பகுதிகளை தாண்டி சென்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல், நிலச்சரிவினால் உண்டான மணல்திட்டுகள் அப்பகுதியில் ஓடும் சிறிய ஆறான இருவஞ்சிபுழா ஆற்றின் பரப்பளவை வெகுவாக அதிகரித்து கீழே நோக்கி ஓடியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் வெளியிட்ட புகைப்படங்களில் கிடைத்துள்ள மற்றொரு தகவல், ஏற்கெனவே நிலச்சரிவு உண்டான அதே இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. | இணைப்பில் முழுமையாக பார்க்க > மேப் 1, மேப் 2

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x