Published : 06 May 2018 04:02 PM
Last Updated : 06 May 2018 04:02 PM

திப்பு சுல்தானை கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்தது ஏன்? - பிரதமர் மோடி கடும் சாடல்

காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருவதுடன், அண்ணல் அம்பேத்கரை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது என கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தல் பிரதமர் மோடி கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்து ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது.

காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கி கடுமையாக பேசி வருகின்றனர். இந்நிலையில் சித்ரதுர்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸையும், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:

‘‘மக்களிடம் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் தினம்தோறும் ஒரு பொய்க்கதையை சொல்லி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் தினமும் புது புது பொய்களை அவிழ்த்து வருகிறது. நாட்டிற்காக உழைத்த தலைவர்களை காங்கிரஸ் அவமதித்து வருகிறது. குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸிடம் இருந்து மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. நேரு குடும்பத்தினரை தவிர மற்றவர்கள் அந்தகட்சியில் ஒங்கட்டப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

நவீன கர்நாடகாவை வடிவமைத்த நிஜலிங்காப்பாவை காங்கிரஸ் புறக்கணித்தது. ஒவ்வாரு முறையும் அவரை அவமானபடுத்த காங்கிரஸ் தவறவில்லை. நிஜலிங்கப்பாவை போல், அம்பேத்காரையும் காங்கிரஸ் அவமதித்தது. அவரை காக்க வைத்து அவமானப்படுத்தியது. அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும். பாரத ரத்னா விருது கூட வழங்கப்படவில்லை.

அம்பேத்காரின் பெருமைகளை மத்திய அரசு உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி வருகிறது. அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டுகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரையும், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரையும் குடியரசு தலைவராக்கியது பாஜக தான். ஏழைகள் உயர்ந்த இடத்திற்கு வருவதை காங்கிரஸால் ஏற்க முடியாது. தாழ்த்தப்பட்டவர்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. அம்பேத்காரை கொண்டாடாத காங்கிரஸ் திப்பு சுல்தானை கொண்டாடி வருகிறது. பெருமைக்குரியவர்களின் வாழ்க்கை வரலாறை காங்கிரஸ் எப்போதும் கொண்டாடியதில்லை’’

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x