Last Updated : 26 May, 2018 09:09 PM

 

Published : 26 May 2018 09:09 PM
Last Updated : 26 May 2018 09:09 PM

மோடியும், அமித் ஷாவும் நாட்டுக்குத் தீங்கானவர்கள்: காங்கிரஸ் விளாசல்

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் நாட்டுக்குத் தீங்கானவர்கள் என மக்கள் அறிந்து கொண்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

பாஜக அரசின் 4 ஆண்டு கால ஆட்சியை நம்பிக்கை துரோகம், தந்திரம், பழிவாங்குதல் மற்றும் பொய்கள் என்ற அடிப்படையில் பகுக்கலாம் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் இன்றுடன் முடிகிறது. மோடி பிரதமராக பொறுப்பேற்று 5-வது ஆண்டைத் தொடங்குகிறார். இதையொட்டி பாஜக சார்பில் சாதனை விளக்கக் கூட்டங்கள், பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைத்த இந்த நாளை, துரோக நாளாக கடைப்பிடிக்கிறது. பாஜகவை, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத துரோக (பீட்ரேயல்) ஜனதா கட்சி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு கடுமையாக சாடி இருந்தார். இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா, அசோக் கெலாட் ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது, இந்தியாவுக்குத் துரோகம் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டனர். அதில் பாஜக அரசுக்கு எதிராக 40 கேள்விகளைக் கேட்டிருந்தனர். மேலும், நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மோடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தன. நாட்டில் நிலவும் சூழல் குறித்து சிறிய குறும்படமும் வெளியிடப்பட்டது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஊடகங்களுக்கு அளித்தபேட்டியில், ''மோடியின் ஆட்சியில் யாருமே பாதுகாப்பாக இல்லை.ஒவ்வொருவருக்கும் தூக்கமில்லா இரவுகள்தான் மிஞ்சுகிறது. நீங்கள் என்ன நினைத்தாலும் அதை வெளியில் சொல்ல முடியாது. நீங்கள் என்ன நினைத்தாலும் அதை எழுத முடியாது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சிறுபான்மையினர், ஏழை மக்கள், தலித் மக்கள் ஆகியோர் பாதுகாப்பாக இல்லை. பேச்சு சுதந்திரம், கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஊடகங்களுக்கான சுதந்திரம் இல்லை. பாதுகாப்பாகவும் இல்லை. மோடியும், அமித் ஷாவம் நாட்டுக்குத் தீங்கானவர்கள் என மக்கள் அறிந்து கொண்டார்கள்'' எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் கூறுகையில், ''அச்சம், வெறுப்பு, வன்முறை ஆகியவைதான் கடந்த 4 ஆண்டு கால மோடி ஆட்சியில் இருக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு மக்களும் மகிழ்ச்சியற்று வாழும் சூழல் இருக்கிறது. வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படாததால், மக்கள் துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்கிறார்கள். மக்களை ஏமாற்றும் இதுபோன்ற பிரதமரை நாங்கள் பார்த்தது இல்லை. எப்போதும் பொய்களைப் பேசி மக்கள் தவறாக வழிநடத்துகிறார்'' எனக் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ''வார்த்தை ஜாலப்பேச்சு மூலம் நாட்டை வெற்றிகரமாக நடத்திவிடலாம் என மோடி எண்ணுகிறார். மோடியின் பேச்சுக்கும், செயலுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. எவ்வளவுதான் பாஜக பொய்கள் பேச முடியும், மக்கள் இந்தப் பொய்களால் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள். மக்களின் வேதனை புரிந்து கொள்ள பிரதமர் மோடி மறுக்கிறார். பாஜவுக்கு இனி துரோக ஜனதா கட்சி என்று பெயர் மாற்றியுள்ளோம். பாஜக அரசின் 4 ஆண்டு கால ஆட்சியை நம்பிக்கை துரோகம், தந்திரம், பழிவாங்குதல் மற்றும் பொய்கள் என்ற அடிப்படையில் பகுக்கலாம்'' என விமர்சித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் வெளியிட்ட புத்தகத்தில், மக்களுக்கு ரூ.15 லட்சம் வங்கிக்கணக்கில் எப்போது செலுத்துவீர்கள்?, வங்கிக்கொள்ளை குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்?, ரபேஃல் போர்விமானத்தின் உண்மை விலை என்ன?, விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி செய்ய அரசு ஏன் மறுக்கிறது?, விவசாயக் காப்பீடு நிறுவனங்களுக்கு ஏன் பாஜக அரசு உதவுகிறது?, மோடி கூறிய 2 கோடி வேலைவாய்ப்புகள் என்னாயிற்று ? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x