Published : 22 Jul 2024 06:04 AM
Last Updated : 22 Jul 2024 06:04 AM
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் அருகேயுள்ள மலையின்கீழு பகுதியைச் சேர்ந்த பெண் கிருஷ்ணாதங்கப்பன்(28). இவருக்கு சிறுநீரகத்தில் கல் பிரச்சினை காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் நெய்யாற்றின்கரா பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் வினு, கிருஷ்ணா தங்கப்பனை பரிசோதித்து ஊசி போட்டுள்ளார். உடனே அந்தப் பெண் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ளஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
மருத்துவர் தவறான ஊசி மருந்தை செலுத்தியதால்தான் தனது மனைவி கிருஷ்ணா உயிரிழந்ததாக, அவரது கணவர் சரத் நெய்யாட்டின்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புதிய சட்டப்பிரிவு பிஎன்எஸ் (பாரதிய நியாய சம்ஹிதா) 12-வது பிரிவின் கீழ்போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது உயிருக்கு அல்லது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிரிவு ஆகும். அலர்ஜி பரிசோதனை செய்யாமல், ஊசிமருந்தை செலுத்தி மருத்துவர் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார் என எப்ஐஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலர்ஜியால் உயிரிழப்பு: இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கேரள அரசு மருத்துவர்கள் சங்கம், ‘‘அடிவயிறு வலிக்கு வழக்கமாக செலுத்தப்படும் ஊசி மருந்தைதான் மருத்துவர் செலுத்தியுள்ளார். எந்த மருந்து செலுத்தினாலும் ஏற்படும் ‘அனாபிலேக்ஸிஸ்’ என்ற விரைவான மற்றும் கடுமையான அலர்ஜி இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். எனவே இது மருத்துவ அலட்சியம் அல்ல’’ என கேரள அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT