Published : 15 Aug 2014 01:06 PM
Last Updated : 15 Aug 2014 01:06 PM

நம் சட்டம்... நம் உரிமை... மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி வரும் உதவிகள்!

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு உதவிகள், நலத்திட்டங்கள், பயிற்சிகள், இலவசக் கருவிகள் உள்ளிட்டவை குறித்து பார்த்து வருகிறோம். இதுதொடர்பாக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று முடநீக்கு பயிற்சி உள்ளிட்டவை அளிக்க மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் ஏதேனும் சிறப்புத் திட்டங்கள் உள்ளதா?

இதுவரை இல்லை. எனினும், தமிழக அரசு விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் கீழ் வாகனம் வழங்கப்பட உள்ளது. அதில் ஒரு பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர், ஆர்த்தோ டெக்னீஷியன், உதவியாளர் ஆகியோர் இருப்பார்கள். அந்த வாகனம் ஒவ்வொரு நாளும் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று அங்கு இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?

தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் துறை மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழுநோயில் இருந்து அவர்கள் குணமடைந்தாலும், தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிடவேண்டும். அவர்கள் வேலைக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறு குறைவு. அதை கருத்தில் கொண்டுதான் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்பதற்கான மருத்துவச் சான்றிதழுடன் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாக மறுவாழ்வு மையங்களும் உள்ளன. மாற்றுத் திறனாளிகள் துறையை அணுகினால் வழிகாட்டப்படும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் உதவிகள் வழங்கப்படுகிறதா?

மனவளர்ச்சி குன்றியவர்கள்போல பிறவியில் இருந்தே பாதிக்கப்படாமல், வேறு சூழ்நிலைகளால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமிழகம் முழுவதும் 8 மையங்கள் செயல்பட்டுவருகின்றன. அங்கு அவர்களுக்கு பயிற்சியளிப்பதுடன், வாழ்வில் மேம்பட பல்வேறு வகையான தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

விபத்தால் கை, கால் இழந்து அதன்மூலம் மாற்றுத் திறனாளியாக ஆனவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?

விபத்து காரணமாக மாற்றுத் திறனாளி ஆனவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் செயற்கைக்கால், கை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. உதவித் தொகையைப் பெற அவர்களது பாதிப்பின் அளவு 75 சதவீதத்துக்கு மேல் இருக்கவேண்டும். அதற்கான மருத்துவச் சான்றிதழ், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை, பாதிப்பின் அளவு 60 சதவீதத்துக்கு சற்றுமேல் இருந்தாலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் மாத உதவித் தொகைக்கு பரிந்துரைக்கும்படி விண்ணப்பிக்கலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x