Published : 06 May 2018 12:46 PM
Last Updated : 06 May 2018 12:46 PM

‘‘தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிய மகன்’’ - தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக மகனுடன் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி அங்கு உயிரிழந்தார். மகன் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது வெளியே இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவர் உயிரிழந்தது தெரியாமல் மாணவர் தேர்வு எழுதினார்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்வபவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. அதன்படி நாடுமுழுவதும் இந்த தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநிலங்களில் தேர்வு எழுதுபவர்கள் முன்கூட்டி புறப்பட்டுச் சென்றனர். .

திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியைச்சேர்ந்த சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

கிருஷ்ணசாமி தனது மகனுடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்குள் சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் மரணடைந்தார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதி வருகிறார்.

இதனிடையே உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதி முடிந்த பின் மாணவனை அழைத்து வரவும், கேரள மாநில தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு தமிழக அரசு அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x