Last Updated : 18 May, 2018 04:00 PM

 

Published : 18 May 2018 04:00 PM
Last Updated : 18 May 2018 04:00 PM

‘ஜூன் மாதத்துக்குள் காவிரி வரைவு செயல்திட்டத்தை செயல்படுத்துங்கள்’-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; வழக்குகள் முடித்துவைப்பு

மத்திய அரசின் திருத்தப்பட்ட காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பருவகாலம் தொடங்குவதற்கு(ஜுன்மாதம்) முன்பாகவே செயலாத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்த உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம்தான் நீர் பங்கீடு தொடர்பான அனைத்து அதிகாரம் படைத்து எனத் தெரிவித்தது.

2007ல் காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்கள் மேல்முறையீடு செய்திருந்தன, 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கியது போதாது எனத் தமிழகம் மேல்முறையீடு செய்திருந்தது. தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-யாக குறைக்க கர்நாடகம் மேல்முறையீடு செய்திருந்தது.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 192 டிஎம்சி-யிலிருந்து 177.25 டிஎம்சி-யாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு 284.75 டிஎம்சி நீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சி நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம்எனச் சொல்லப்படும் வரைவு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்து இருந்தது.

இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இரு முறை அவகாசம் கேட்டநிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த 14-ம் தேதி 14 பக்க வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யக் கோரி இருந்தன.

குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதைத் திருத்தி நேற்று நீர்வளத்துறை செயலாளர் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் இறுதி உத்தரவு இன்று பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்து இருநத்து. அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இனி காவிரி மேலாண்மை ஆணையத்தேயே அணுக வேண்டும் மத்திய அரசை அணுகத் தேவையில்லை எனத் தெரிவித்தனர்.

தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அதற்குப் பதிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அதேசமயம், பெங்களூருவில் நிர்வாக அலுவலகம் அமைக்கப்படும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த வரைவு செயல் திட்டத்தில் கேரள, கர்நாடக அரசுகள் அளித்த பாதகமான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த தாமதம் செய்த மத்திய அரசுக்கு எதிராக தமிழகஅரசு தொடர்ந்திருந்த அவமதிப்பு வழக்கும் முடித்துவைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே நீர் பங்கீடு, நீர் திறப்பு, கண்காணிப்பு, மேற்பார்வை ஆகிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான 8 இடங்களையும் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீர்பங்கீட்டில் உள்ள சிக்கல்களை 4 மாநிலங்களும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகித் தீர்க்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தைக் காட்டிலும், ஆணையத்துக்குத்தான் அதிகமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மத்திய அரசின் உதவியை நாடிக்கொள்ளலாம். பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும்

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x