Published : 23 Jun 2024 07:03 AM
Last Updated : 23 Jun 2024 07:03 AM
புதுடெல்லி: ‘நம்பகமான விமான பயணி' திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஉள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், விமானபோக்குவரத்துத் துறை இணைந்து ‘நம்பகமான விமான பயணி' (எப்டிஐ-டிடிபி) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 'நம்பகமான விமான பயணி' திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ‘நம்பகமான விமானபயணி' திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.இதை பின்பற்றி இந்தியாவிலும் இந்த திட்டம் அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களின் விமான பயணம் எளிதாகும். இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் நெரிசல் குறையும்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர், வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஓசிஐ அட்டைவைத்திருப்போர் 'நம்பகமான விமான பயணி' திட்டத்தின் கீழ்ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பிறகு இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள எப்ஆர்ஆர்ஓ அலுவலகத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்படும். இதற்குஇந்தியர்களுக்கு ரூ.2,000, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 100 டாலர் கட்டணம் வசூலிக் கப்படும்.
இந்த திட்டத்தில் பதிவுசெய்த பயணிகள், இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க அவசியமில்லை. அவர்களுக்கான சிறப்பு வாயில்கள்மூலம் சாதாரண பரிசோதனைகளுக்குப் பிறகு விமான பயணத்தை மேற்கொள்ளலாம் அல்லது விமான நிலையங்களில் இருந்து விரைவாக வெளியேறலாம். இந்த திட்டம் விரைவில்நாடு முழுவதும் விரிவுபடுத் தப்படும். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT