Last Updated : 23 May, 2018 09:22 PM

 

Published : 23 May 2018 09:22 PM
Last Updated : 23 May 2018 09:22 PM

மோடி, அமித் ஷாவின் ‘அஸ்வமேதா வெற்றிக் குதிரையை’ நாங்கள் அடக்கிக் கட்டி விட்டோம்: குமாரசாமி பெருமிதம்

பிரதமர் மோடி, அமித் ஷாவின் அஸ்வமேதா குதிரையை வெற்றிகரமாக அடக்கி, கட்டிவிட்டது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. மாநிலத்தின் 24-வது முதல்வராக ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட பாஜக எதிரான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முதல்வராகப் பதவி ஏற்றபின் குமாரசாமி பேசியதாவது:

என்னுடைய நோக்கமெல்லாம், மோடி, பாஜக தலைவர் அமித் ஷாவின் அஸ்வமேதா குதிரையை அடக்கி, கட்டி இழுத்துவருவதுதான் என்று உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் வந்தபோதே நான் என் கட்சிக்காரர்களிடம் கூறினேன். இன்று காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பாஜகவின் அஸ்வமேதா வெற்றிக் குதிரையை கர்நாடகாவில் அடக்கி, கட்டிவிட்டது.

காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் சூழ்நிலையால் இணைந்திருக்கிறோம், நாங்கள் சூழ்நிலையின் குழந்தைகளாக இருக்கிறோம். நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயலாற்றுங்கள் எனப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டதற்காக நாங்கள் இணைந்திருந்கிறோம்.

அமித் ஷாவுக்கும், மோடிக்கும் காலம் முடியப்போகிறது அதற்கான நேரம் வந்துவிட்டதைத்தான், அவர்களின் அஸ்வமேதா குதிரையை நாங்கள் இன்று கட்டிவிட்டதை உணர்த்துகிறது.

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்குமா என்று என்னிடம் பலரும் சந்தேகமாகக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் உறுதி தருகிறேன், நிலையான ஆட்சியை எங்கள் கூட்டணி அரசு வழங்கும். அவர்களின் கருத்துக்களை நாங்கள் மாற்றுவோம்.

கடந்த 2006-ம் ஆண்டு ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி முறிந்ததைப்பற்றி இன்னும் பேசுகிறார்கள். இப்போது எங்களுக்கும், காங்கிரஸுக்கும் இடையே நம்பிக்கை அதிகரித்துவிட்டது, ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒரு கட்சி ஆட்சியைக்காட்டிலும், இந்தக் கூட்டணி ஆட்சி நிலையாக இருக்கும் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

எங்களுக்கு இடையே எந்தவிதமான வேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்பு கொடுக்கமாட்டோம், இணைந்து செயல்பட்டு மாநிலத்தின் பிரச்சினைகளை தீர்ப்போம். எனக்கு முன் ஏராளமான சவால்கள் இருக்கின்றன. ஒரு அரசாங்கத்தை எளிதாக நடத்திவிட முடியாது. ஒவ்வொரு நடவடிக்கையையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்வேன். இந்த அரசு முன்னோடி அரசாகச் செயல்படும். என்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றி, அடுத்த கட்டத்துக்கு செல்வோம்

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x