Last Updated : 26 May, 2018 04:52 PM

 

Published : 26 May 2018 04:52 PM
Last Updated : 26 May 2018 04:52 PM

மஹாராஷ்டிர முதல்வர் குறித்து உத்தவ் தாக்ரே வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சை: தேர்தல் ஆணையத்தில் புகார்

மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டது பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் பாஜகவினரும், சிவசேனா கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தொண்டர்களிடம் பேசுவது போன்ற ஆடியோவை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் முதல்வர் பட்நாவிஸ் பேசுகையில், ''நம்முடைய பால்கர் தொகுதியை யாரேனும் கைப்பற்றுவதற்குப் போட்டியாக வந்தால், நம்முடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்தால், அவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மிகப்பெரிய தாக்குதலை நடத்தவேண்டும். பாஜக யாரென்று வெளிப்படுத்த வேண்டும். எவ்வளவு பெரிய விலை கொடுத்தாலும், இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு எந்த விஷயத்தையும் பயன்படுத்தலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பட்நாவிஸ் பேசுவதாகக் கூறப்படும் இந்த ஆடியோவை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே வெளியிட்டு, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வலியுறுத்தியுள்ளன.

ஆனால், இது போலியானது, சித்தரிக்கப்பட்ட ஆடியோ என்று பாஜக மறுத்துள்ளது. முதல்வர் பட்நாவிஸ் பேசிய ஒட்டுமொத்த உண்மையான ஆடியோவை பாஜக விரைவில் வெளியிடும். நவீன தொழில் நுட்பங்களை சிவசேனா கட்சி தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், ’’சிவசேனா வெளியிட்ட இந்த ஆடியோ குறித்து முதல்வர் பட்நாவிஸ் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கையைச் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டும்.

ஒருவேளை இந்த ஆடியோ உண்மையாக இருந்தால், முதல்வர் பட்நாவிஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேசமயம், போலியாக இருந்தால், உத்தவ் தாக்கரே மீது பட்நாவிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில், ’’சிவசேனா கட்சி முழுமை பெறாத ஆடியோவையும், தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் எடிட் செய்தும் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம், தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளோம். விரைவில் பட்நாவிஸ் பேசியது தொடர்பான முழுமையான ஆடியோவை வெளியிடுவோம்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x