Last Updated : 24 May, 2018 08:31 AM

 

Published : 24 May 2018 08:31 AM
Last Updated : 24 May 2018 08:31 AM

நீதிமன்ற உத்தரவுக்கும் அசராத அகிலேஷ், மாயாவதி: அரசு பங்களாக்களை உடனடியாக காலி செய்ய மறுப்பு

உபியின் முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் முன்னாள் முதல்வர்களான அகிலேஷ்சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் அசரவில்லை. மாயாவதி தான் குடியிருக்கும் அரசு பங்களாவை கன்ஷிராம் பெயரில் அறக்கட்டளையாக மாற்ற முயல அகிலேஷ் இரண்டு வருடம் கால அவகாசம் கேட்டிருக்கிறார்.

உபியில் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘‘உயர் பதவியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றால் அவர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்று கூறி, முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் சிங், ராஜ்நாத் சிங், கல்யாண் சிங், மாயாவதி, என்.டி.திவாரி ஆகியோருக்கு அரசு பங்களாக்களை காலி செய்ய மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

லக்னோவின் எண்-9, மால் அவென்யூ சாலையில் அமைந்துள்ள மாயாவதி வசிக்கும் அரசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரும் அவரது அரசியல் குருவுமான கன்ஷிராம் பெயரில் நினைவு இல்லமாக மாற்ற மாயாவதி முயல்கிறார். அதில் புதிதாக, ‘கன்ஷிராம் நினைவு இல்லம்’ எனும் பெயரில் ஒரு பலகை தொங்குகிறது. அதன் எதிர்ப்புறம் எண்-13-ல் மாயாவதிக்கு சொந்தமான ஒரு பிரம்மாண்டமான பங்களா உள்ளது. இந்த பங்களாவை 2010-ல் உபி. முதல்வராக அவர் இருந்தபோது ரூ.15 கோடி செலவில் வாங்கியிருந்தார். 71 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள இந்த பங்களாவுக்கு மாறும் முயற்சியில் இறங்கியுள்ள மாயாவதி தன் அரசு பங்களாவை ஒப்படைப்பதாகத் தெரியவில்லை.

லக்னோவின் விக்கிரமாதித்யா மார்க் எண்-4 விலாசத்தில் அகிலேஷின் அரசு பங்களா உள்ளது. இதை காலிசெய்ய அகிலேஷ் இரண்டு வருடம் கால அவகாசம் கேட்டு உபி அரசிற்கு எழுதியுள்ளார். எனினும், முலாயம்சிங் யாதவ் தன் பங்களாவை காலிசெய்யத் தயாராகி வருகிறார். ரூ.15 கோடி செலவில் லக்னோவின் கோமதி நகரில் ஒரு பங்களாவை முலாயமிற்காக அவரது கட்சியின் ஒரு மூத்த எம்பி விலைபேசி வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங்கும் லக்னோவின் எண்-4, காளிதாஸ் மார்கில் உள்ள தனது பங்களாவை காலிசெய்கிறார். அவருக்கு சொந்தமான லக்னோவின் கோமதி நகரில் உள்ள பங்களாவுக்கு மாறுகிறார். கல்யாண்சிங், என்.டி.திவாரியும் அரசு பங்களாவை காலி செய்கின்றனர். இதனிடையில், மனுதாரரான சுக்லா, 15 தினங்களில் காலி செய்யாதவர்கள் மீது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக வழக்கு தொடுக்கத் தயாராகி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x