Last Updated : 07 Apr, 2018 03:25 PM

 

Published : 07 Apr 2018 03:25 PM
Last Updated : 07 Apr 2018 03:25 PM

‘‘நேருவின் பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடக்கூடாது’’ - பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் கடிதம்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தை தினமாக கொண்டாடக்கூடாது, அதற்கு பதிலாக டிசம்பர் 26-ம் தேதியை கொண்டாட வேண்டும் என்று பாஜகவின் 60 எம்.பி.க்கள் பிரமதர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

டிசம்பர் 26-ம் தேதி என்பது, குரு குரு கோவிந்த் சிங்கின் மகன்களான சாகிப்ஜதா அஜித் சிங்(வயது18), சாகிப்ஜதா ஜுஹிர் சிங்(14), சாகிப்ஜதா ஜோராவார் சிங்(9), சாகிப்ஜாதா பதே சிங்(7) ஆகியோர் முகலாய அரசர் அவுரங்கசீப்பால் கொல்லப்பட்டனர். சீக்கிய குரு குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் வீரமரணம் அடைந்த நாளான டிசம்பர் 26-ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மேற்கு டெல்லி எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தலைமையில் 59 எம்.பி.க்கள் கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதேசமயம், ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் தற்போது கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்துக்கு பதிலாக, ‘மாமா தினம்’ என்று கொண்டாடலாம் என்று கடிதத்தில் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிதம் குறித்து வர்மா நிருபர்களிடம் கூறுகையில், ‘ ‘முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகள் மீது அன்பு கொண்டவர் என்பதற்காக அவரின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவது என்பதை ஏற்க முடியாது. அதற்கு பதிலாக டிசம்பர் 26-ம் தேதி குருகோவிந்த் சிங்கின் மகன்கள் வீரமரணம் அடைந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடலாம். இதற்கு பாஜக எம்.பி.க்கள் 60 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட காங்கிரஸ் எம்.பி.க்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை அனைத்து குழந்தைகளும் நேரு ‘மாமா’ என்று அழைக்கிறார்கள். ஆதலால், அவரின் பிறந்தாளை மாமா தினமாகக் கொண்டாடலாம்’ ‘எனத் தெரிவித்தார்.

வர்மா உள்ளிட்ட 60 எம்.பி.க்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும்பட்சத்தில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து குழந்தைகள் தினத்தை மாற்றி அமைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x