Last Updated : 20 Apr, 2018 08:05 PM

 

Published : 20 Apr 2018 08:05 PM
Last Updated : 20 Apr 2018 08:05 PM

அவசரச்சட்டம் வருகிறது: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

 

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதற்கான அவசரச்சட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாட்களில் பிறப்பிக்கும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்த கடிதத்தில், போஸ்கோ சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்து, 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையே தூக்குத் தண்டனை விதிக்கும் நடவடிக்கையை அரசு தொடங்கிவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆதலால், நாளை நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, விரைவில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

அதேபோல, உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், சூரத் நகரில் 11-வயது சிறுமி 8நாட்கள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 86 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது சம்பவங்கள் நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவாலும், போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்து, அதில் தூக்கு தண்டனைப் பிரிவை சேர்க்க வலியுறுத்திக் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு சார்பில் இன்று உறுதிமொழிக் கடிதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

வழக்கறிஞர் அலாக் அலோக் சிறீவஸ்தவா தாக்கல் செய்த பொதுநலன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கத் திருத்தம் செய்யப்படும் என்ற உறுதிமொழிக் கடிதத்தை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் இதை அளித்தார். இதையடுத்து அடுத்த விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

இதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும். ஆனால், தற்போதுள்ள போஸ்கோ சட்டப்படி, குழந்தையைப் பலாத்காரம் செய்பவருக்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறை மட்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். ஆனால், இந்த முறையில் திருத்தம் செய்யப்பட்டு பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டாலே தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இது குறித்து சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமிகள், குழந்தைகள் பலாத்காரத்தை தடுக்கக்கூடிய ஒரேவழி தூக்குத்தண்டனை விதிக்க அவசரச்சட்டம் பிறப்பிப்பதுதான். நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால், ஜூலை மாதம்வரை காத்திருக்க வேண்டும். ஆதலால், அவசரச்சட்டம் தான் வழியாகும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x