Published : 06 Apr 2018 01:19 PM
Last Updated : 06 Apr 2018 01:19 PM

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா - மத்திய அரசுக்கு நெருக்கடி

 ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித் தொகுப்பும் வழங்க மத்திய அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வில் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மத்திய அரசு கோரிக்கையை ஏற்கவில்லை. டாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்று நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்துமாறு தெலுங்கு தேச எம்.பிகளுக்கு அக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி அம்மாநில எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸூம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி வழங்க மத்திய அரசு மறுத்தால் எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே அறிவித்து இருந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை காத்திருப்போம், அன்றைய தினமே ராஜினாமா செய்வோம் என ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்களான வர பிரசாத ராவ், சுப்பர ரெட்டி, மிதுன் ரெட்டி, ஓ.எஸ். அவினேஷ் ரெட்டி, மோகன் ரெட்டி ஆகியோர் மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனை இன்று நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

இதுபற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில் ‘‘ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருவதை கண்டிக்கும் விதமாக எங்கள் கட்சி எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்குதேசம், எங்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்’’ எனக்கூறினார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்துள்ளதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x