Last Updated : 18 Apr, 2018 05:26 PM

 

Published : 18 Apr 2018 05:26 PM
Last Updated : 18 Apr 2018 05:26 PM

‘இந்து தீவிரவாதம்’ என குறிப்பிட்டதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்: அமித் ஷா வலியுறுத்தல்

 

காவித் தீவிரவாதம், இந்துத் தீவிரவாதம் எனக் கூறி நாட்டை காங்கிரஸ் கட்சியினர் அவமானப்படுத்திவிட்டனர். இதற்கு அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

2007-ம் ஆண்டு ஹைதபாபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 5 பேரை தேசிய புலனாய்வு நீதிமன்றம் விடுவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்துத் தீவிரவாதம், காவித் தீவிரவாதம் என்று குறிப்பிட்டுபேசினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா, ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் அமித் ஷா பேசியதாவது:

இந்து தீவிரவாதம், காவித் தீவிரவாதம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துவருகிறது. மிகப்புனிதமான இந்து மதத்தை தீவிரவாதத்துடன் இணைத்துப்பேசுவது என்பது பாவமாகும். அந்த பாவத்தை தொடர்ந்து காங்கிரஸ் செய்து வருகிறது.

மிகச்சிறந்த இந்துக் கலாச்சாரம்தான் உலகிற்கு கலாச்சாரம், அமைதி, நாகரீகம் ஆகியவற்றை லட்சக்கணக்காண ஆண்டுகள்ககு முன்பே கற்றுக்கு கொடுத்துள்ளது. ஆனால், அந்த புனிதமான இந்து மதத்தை தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள்.

ராகுல் காந்தி ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல், கர்நாடக முதல்வர் சித்தராமையா வரை அனைவரும் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x