Published : 06 Apr 2018 11:06 AM
Last Updated : 06 Apr 2018 11:06 AM

‘‘மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்’’ - எம்.பிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு

 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்குதேச எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு கட்சி எம்.பிகளுக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித் தொகுப்பும் வழங்க மத்திய அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வில் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தெலுங்குதேசம் கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனினும் மத்திய அரசு கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்று நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்துமாறு தெலுங்கு தேச எம்.பிகளுக்கு அக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு சைக்களில் ஓட்டி வந்தார்.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறுகையில் ‘‘ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால் மத்திய அரசு பாரமுகமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பிக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவர். கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்’’ எனக் கூறினார்.

இதுமட்டுமின்றி வரும் 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியையும் தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x