Published : 21 Apr 2018 08:13 AM
Last Updated : 21 Apr 2018 08:13 AM

நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பெங்களூரு மத்திய சிறையில் சோதனை: போதைப் பொருட்கள், செல்போன், லேப்டாப் சிக்கின‌

பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் போலீஸார் நேற்று முன் தினம் நள்ளிரவில் நடத்திய திடீர் சோதனையில் போதைப் பொருட்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை சிக்கின.

கர்நாடக மாநிலத்தில் பெரிய சிறையாக உருவாகியுள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை பெங்களூருவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளது. ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் சுமார் 5 ஆயிரம் ஆண் மற்றும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கர ஆயுதங்கள்

பரப்பன அக்ரஹாரா சிறையில் மது, கஞ்சா, சிகரெட், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களும், செல்போன், சிம் கார்டு, லேப்டாப் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

அதே போல சிறையில் ஆண் கைதிகள் பகுதியில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் தெரியவந்தது. கடந்த இரு மாதங்களில் 3 கைதிகள் மர்மமான முறையில் இறந்த விவகாரம் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

3 மணி நேர சோதனை

இந்நிலையில் கர்நாடக சிறைத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் 50 காவல் ஆய்வாளர்களும் இடம்பெற்றிருந்தனர். போலீஸார் ஆண் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறைக்கும் சென்று தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கைதிகளிடம் இருந்து பீடி, சிகரெட், கஞ்சா, குட்கா, மது வகைகள் போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன், சிம் கார்டு, மெமரி கார்டு, பென் டிரைவ், லேப் டாப், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களின் திருட்டு சிடிகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

நள்ளிரவு நேரம் என்பதால் போலீஸார் சசிகலா உள்ளிட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் சோதனை நடத்தவில்லை எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x