Published : 13 Apr 2018 11:23 AM
Last Updated : 13 Apr 2018 11:23 AM

நள்ளிரவில் ராகுல் காந்தி போராட்டம்: பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக அறைகூவல்

அடுத்தடுத்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்ககோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நள்ளிரவில் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம் தேதி காணாமல் போனார். இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு அச்சிறுமி அதேபகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இருவர், தலைமைக் காவலர் ஒருவர் உட்பட 8 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை மயக்க நிலையில் வைத்து கோயிலொன்றில் அடைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவிக்கிறது.

இதுபோலவே, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். செங்கரும், அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அனில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ராகுல் காந்தி கூறுகையில் ‘‘நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கூறுகிறார். அது நல்ல விஷயம்தான். ஆனால் கோஷம் மட்டும் போதுமா? அதை செயல்படுத்தி பெண் குழந்தைகளை வன்முறையில் இருந்து பாதுகாக்க வேண்டாமா?’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x