Last Updated : 13 Apr, 2018 08:39 PM

 

Published : 13 Apr 2018 08:39 PM
Last Updated : 13 Apr 2018 08:39 PM

கணக்குப் பாடம் செய்யாத 2-ம் வகுப்பு சிறுவனின் தொண்டையில் பிரம்பால் குத்திய ஆசிரியர்: பேச்சிழந்து உயிருக்குப் போராடும் மஹாராஷ்டிரா மாணவர்

மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்ட அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவர் கணக்குப் பாடம் செய்யாத காரணத்தால் அவரின் தொண்டையில் ஆசிரியர் பிரம்பால் குத்தியுள்ளார். இதில் மாணவரின் உணவுக்குழாய், மூச்சுக் குழாயில் காயம் ஏற்பட்டு பேச்சிழந்து, உயிருக்குப் போராடி வருகிறார்.

அகமதுநகர் மாவட்டம், கர்ஜத் வட்டத்தில் பிம்பால்கான் கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ரோஹன் டி ஜான்ஜிரே. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று கணக்கு ஆசிரியர் சந்திரகாந்த் சோபந்த் ஷிண்டே வகுப்பில் கணக்குப் பாடம் எடுத்துள்ளார்.

அப்போது, வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு கணக்கை மாணவர் ரோஹன் எழுதவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் சந்திரகாந்த் சோபந்த் ஷிண்டே தான் வைத்திருந்த பிரம்பை ரோஹனின் வாய்க்குள் செலுத்தி தொண்டையில் குத்தியுள்ளார். இதனால், பிரம்பு தொண்டையின் மூச்சுக்குழல், உணவுக்குழாய் ஆகியவற்றில் பட்டு அதைக் கிழித்துள்ளது. இதனால், மாணவர் ரோஹன் வலி தாங்காமல் அலறி, ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதைப் பார்த்த சக மாணவர்கள் அலறியடித்து வகுப்பைவிட்டு வெளியே ஓடினார்கள். இந்தத் தகவல் அறிந்து வந்த தலைமை ஆசிரியர் உடனடியாக ரோஹனை ஆம்புலன்ஸ் மூலம் ராஷின் நகர மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம், மேல் சிகிச்சைக்காக புனே கொண்டு செல்ல அறிவுறுத்தினார்கள்.

இப்போது புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவர் ரோஹன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரம்பு தொண்டையில் பட்டு கிழித்ததால், பேச்சிழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மாணவரின் பெற்றோர் தரப்பில் அகமதுநகர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சந்திரகாந்த் சோபன் ஷிண்டே மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகமும், ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் ஆய்வாளர் அதிகாரி மேத்திரே கூறுகையில், ''மாணவர் ரோஹனின் தாய் சுனிதா ஜான்ஜிரே அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இன்னும் அவரைக் கைது செய்யவில்லை. ரோஹனுக்கு ஏதேனும் நடந்தால், வழக்கு வேறுமாதிரி பதிவு செய்யப்படும். மாணவர் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x