Published : 21 Apr 2018 08:32 AM
Last Updated : 21 Apr 2018 08:32 AM

தாவூத்தின் 7 பங்களாக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 7 பங்களாக்களை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறார். அவர், தற்போது பாகிஸ்தானில் வசித்து வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமாக பல ஆடம்பர பங்களாக்கள், ஹோட்டல்கள் இருக்கின்றன. அவற்றில் பல சொத்துகள், பினாமிகளின் பெயர்களில் உள்ளன. இந்த சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும், தாவூத்துக்கு சொந்தமாக மும்பையில் இருந்த 3 ஹோட்டல்கள் சுமார் ரூ.12 கோடிக்கு ஏலம் விடப்பட்டன.

இந்த சூழ்நிலையில், மும்பை யில் தாவூத்துக்குச் சொந்தமாக உள்ள 7 பங்களாக்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அவரது தாயார் மற்றும் சகோதரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற் குறிப்பிட்ட 7 பங்களாக்களும் தங்கள் பெயர்களில் இருப்பதால், அவற்றை பறிமுதல் செய்யக்கூடாது என அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவானது, நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் ஏ.எம். சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “மேற் குறிப்பிட்ட சொத்துகள் யார் பெயரில் இருந்தாலும், அவை தாவூத்தால் வாங்கப்பட்டவை. அவற்றை பறிமுதல் செய்வதை தடுக்க முடியாது. அந்த சொத்துகளை மத்திய அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x