Published : 13 May 2024 05:28 PM
Last Updated : 13 May 2024 05:28 PM

‘பாஜக சார்பில் அபினவ் பிரகாஷ் விவாதத்தில் பங்கேற்பார்’ - ராகுல் காந்திக்கு தேஜஸ்வி சூர்யா கடிதம்

புதுடெல்லி: “பாஜக இளைஞர் அணியின் தேசிய துணைத் தலைவர் அபினவ் பிரகாஷ், உங்களோடு பொது விவாதத்தில் பங்கேற்பார்” என்று ராகுல் காந்திக்கு பாஜக இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்திக்கு, தேஜஸ்வி சூர்யா எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள ராகுல் காந்தி, தீவிர தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க ஆர்வம் காட்டி இருப்பதற்காக நாங்கள் பாராட்டுகிறோம். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பது மிகவும் முக்கியம் என்பதை, பாஜகவின் இளைஞர் அணி என்ற வகையில் நாங்கள் ஏற்கிறோம்.

இது தொடர்பாக உங்களுடன் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) துணைத் தலைவர் அபினாவ் பிரகாஷ் விவாதம் செய்வார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நீங்கள் ஏற்கெனவே எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது நீங்கள் போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் சுமார் 30% இருக்கும் பாசி (SC) சமூகத்தைச் சேர்ந்த படித்த இளம் தலைவர்.

இவர் பாஜகவின் இளைஞர் அணியில் இருக்கும் மதிப்புமிக்க தலைவர் மட்டுமல்ல, பாஜக அரசு கொண்டு வந்த கொள்கைகள் மற்றும் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக நன்கு விவரிக்கக்கூடிய செய்தித் தொடர்பாளரும்கூட. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் ரம்ஜாஸ் கல்லூரியின் உதவி பேராசிரியராக உள்ளார்.

சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த அவரது புரிதல்கள் விவாதத்துக்கு செழுமைகூட்டம். நீங்கள் அவருடன் விவாதம் நடத்த ஒப்புக்கொள்வதை அறிய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இது ஒரு அரசியல் வாரிசுக்கும் கடினமான வழியில் வந்த ஒரு சாதாரண இளைஞனுக்கும் இடையிலான செழுமையான விவாதமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களின்போது இதுவரை இல்லாத வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனுமானங்களின் பேரில் பல புகார்களை முன்வைத்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார் கூறி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், அயோத்தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் என்றும் பிரதமர் மோடி புகார் கூறியுள்ளார். இந்தவகையில் தொடரும் புகார்கள் அனைத்தும் அனுமானங்களின் பேரில் முன்வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

இவை உண்மையிலேயே சாத்தியமா என்பதை அறியும் வகையிலும், பொதுமக்கள் சார்பிலான மேலும் பல கேள்விகளுடன் விவாதம் செய்ய இரண்டு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. இதில், மூத்த பத்திரிகையாளரும் `தி இந்து' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகிய மூவரும் கையொப்பம் இட்டுள்ளனர்.

தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதமானது, கடந்த 10ம் தேதி பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வசிக்கும் அரசு குடியிருப்பில் பெறப்பட்டுள்ளது. இந்த விவாதமானது எந்த சார்பும் இல்லாத வகையிலும், லாபநோக்கம் இல்லாத மேடையில் நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம், இந்திய பிரஜைகள் எனும் வகையில் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்திருந்தார். விவாதம் நடத்துவது தொடர்பாக ராகுல் காந்தி சார்பில் காங்கிரஸ் கட்சி வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், "விவாதத்துக்கான அழைப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசித்து. அதன்படி, ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயோ விவாதத்தில் கலந்து கொள்வார்கள்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில், "பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொதுமக்கள் தங்கள் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்கத் தகுதியானவர்கள். பிரதமர் மோடி எப்போது விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அதனைத்தொடர்ந்து விவாதத்தின் விவரங்கள் மற்றும் வடிவம் பற்றி ஆலோசிக்கலாம்." என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக இதற்கு பதில் அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x