Published : 13 May 2024 04:27 PM
Last Updated : 13 May 2024 04:27 PM

டெல்லி முதல்வர் இல்லத்தில் உதவியாளரால் தாக்கப்பட்டதாக ஸ்வாதி மலிவால் புகார்

ஸ்வாதி மலிவால்

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்துக்கு இன்று காலை வந்த ஸ்வாதி மலிவால் அங்கிருந்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு இரண்டு முறை அழைத்து, அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் என்பவர் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

விதிகளின்படி, டெல்லி காவல்துறை முன் அனுமதியின்றி அம்மாநில முதல்வர் வீட்டுக்குள் நுழைய முடியாது. அனுமதி பெற்று காவல் துறை நேரில் வந்து விசாரிக்கும்போது அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் ஸ்வாதி மலிவால் இல்லை. அங்கிருந்து புறப்பட்ட ஸ்வாதி மலிவால், 'எனது மனநிலை தற்போது சரியில்லை. பிறகு புகார் அளிக்கிறேன்' என்று கூறியிருக்கிறார். பின்னர் சிறிதுநேரம் கழித்து மீண்டும் கேஜ்ரிவால் இல்லத்துக்கு வந்த ஸ்வாதி, காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சம்மதம் தெரிவித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வாதி மலிவால் குற்றச்சாட்டுத் தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி பதில் சொல்ல வேண்டும். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் விளக்கம் அளிக்குமா?" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x