Last Updated : 08 Apr, 2018 09:20 AM

 

Published : 08 Apr 2018 09:20 AM
Last Updated : 08 Apr 2018 09:20 AM

மாற்றுத்திறனாளி கணவரை சுமந்து சென்ற சம்பவம்: 3 சக்கர சைக்கிளை வழங்கியது உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக தனது கணவரை, அவரது மனைவி முதுகில் சுமந்து சென்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. இதன் எதிரொலியாக அந்த நபருக்கு அம்மாநில அரசு மூன்று சக்கர சைக்கிளை வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரின் கீதா விஹார் பகுதியைச் சேர்ந்தவர் பதன் சிங் (36). கார் ஓட்டுநராக பணிபுரிந்த இவருக்கு, நரம்பு நோய் காரணமாக கால்கள் செயலிழந்தன. இந்நிலையில், அரசு வழங்கும் மூன்று சக்கர சைக்கிளை வாங்குவதற்கு தேவைப்படும் மாற்றுத்திறனாளி சான்றிதழைப் பெறுவதற்காக, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தை பதன் சிங் அணுகினார்.

ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் அவரை பல நாட்களாக அலைக்கழித்தனர். போக்குவரத்துக்கு பணம் இல்லாததால், அவரது மனைவி விமலா தேவி, பதன் சிங்கை தனது முதுகில் சுமந்து ஒரு மாதகாலமாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்துக்கு சென்று வந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் செய்திகளும் பல ஊடகங்களில் 2 தினங்களுக்கு முன்பு வெளியானது.

இதையடுத்து நேற்று முன்தினம் பதன் சிங்கின் வீட்டுக்குச் சென்ற அரசு அதிகாரிகள், அவருக்கு இலவச மூன்று சக்கர சைக்கிளையும், ஊன்றுகோல்களையும் வழங்கினர். மேலும் அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விமலா தேவி ‘தி இந்து’விடம் கூறும்போது, “கணவரின் கால்கள் செயலிழந்ததால், பல வீடுகளில் வேலை செய்கிறேன். இதன்மூலம் மாதத்துக்கு கிடைக்கும் ரூ.3600-ஐ வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். தற்போது இந்த செய்தி வெளியானதால், நாடு முழுவதிலும் உள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளன. மேலும், அவருக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x