Published : 10 May 2024 09:57 AM
Last Updated : 10 May 2024 09:57 AM

பெங்களூரு கனமழை: குளமான சாலைகள்; போக்குவரத்து நெரிசல் - விமான சேவை பாதிப்பு

கோப்புப்படம்

பெங்களூரு: இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்த மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையின் படி வியாழக்கிழமை அன்று கர்நாடகத்தின் பெங்களூருவில் கனமழை பதிவானது. மழை காரணமாக நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

மழையினால் பெங்களூரு நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததும் இதற்கு காரணம். போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் விதமாக போக்குவரத்து காவல்துறை காவலர்கள் களத்தில் தங்கள் பணியை கவனித்தனர்.

ஏர்போர்ட் சாலை, சாளுக்கிய சர்க்கிள் முதல் ஹெப்பல் மேம்பாலம் வரை, சுமனஹள்ளி சந்திப்பு, நாயன்டஹள்ளி சந்திப்பு, ஓஆர்ஆர் முதல் ஹெப்பல் வரையிலான பகுதியில் மழியினால் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கெம்பேகவுடா சர்வதேச‌ விமான நிலையத்துக்கு செல்லும் சாலை மழை வெள்ளத்தால் சூழப்பட்டது.

இதன் காரணமாக மாற்றுப் பாதையில் செல்ல காவல் துறையினர் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தினர். அதனால் பயணிகள் விமான நிலையம் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மைசூரு சாலை பகுதியலும் இதே நிலை நீடித்தது. இது குறித்த தகவலை சமூக வலைதள பயனர்கள் தங்களது பதிவுகளில் தெரிவித்திருந்தனர்.

நகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை நீடித்தது. பலத்த காற்று வீசிய காரணத்தால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து பெங்களூரு மாநகர (BBMP) பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டனர்.

சென்னைக்கு திருப்பப்பட்ட விமானங்கள்: கனமழை காரணமாக பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய 5 சர்வதேச விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சரக்கு விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. அதன் பின்னர் பெங்களூருவில் வானிலை சற்றே சீரானதும் அவை பெங்களூரு புறப்பட்டுச் சென்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x