Published : 21 Apr 2018 07:35 AM
Last Updated : 21 Apr 2018 07:35 AM

திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர் குழு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவை நேற்று அதிகார பூர்வ மாக ஆந்திர அரசு அறிவித்தது. இதில், குழு உறுப்பினர்களாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பெயர் கள் அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்முறை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கடந்த அறங்காவலர் குழு பதவிக்காலம் முடிவடைந்து சுமார் 10 மாதங்கள் வரை புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படவில்லை. இப்பதவிக்கு பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த புட்டா சுதாகர் யாதவ் புதிய அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தானத் தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி, புட்டா சுதாகர் யாதவ் (கடப்பா) அறங்காவலர் குழு தலைவர், சிவாஜி, எம்எல்ஏ (ஸ்ரீகாகுளம்), பி.உமாமகேஸ் வர் ராவ், எம்எல்ஏ (கிருஷ்ணா), வி.அனிதா, எம்எல்ஏ (விசாகப்பட்டினம்), பி.கே. பார்த்த சாரதி, எம்எல்ஏ (அனந்தபூர்), ராயப்பாட்டி சாம்பசிவராவ் (குண்டூர்), சல்லா ராமசந்திரா ரெட்டி (சித்தூர்), பொட்லூரி ரமேஷ் பாபு (கிருஷ்ணா), ருத்ர ராஜு பத்மராஜு (கி. கோதாவரி), ராமகிருஷ்ணா ரெட்டி (கடப்பா), ஜெகன்நாதம் (கி.கோதாவரி) பெத்தி ரெட்டி (தெலங்கானா), வெங்கட வீரய்யா (தெலங்கானா), சுதா நாராயண மூர்த்தி (கர்நாடகா) சப்னா (மகாராஷ்டிரா) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இம்முறை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. கடந்த முறை சேகர் ரெட்டிக்கு தமிழகம் சார்பில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x