Published : 06 May 2024 07:32 AM
Last Updated : 06 May 2024 07:32 AM
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளில் ஏற்கெனவே தேர்தல் முடிந்து விட்டது. மீதமுள்ள 4 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு: அசாமில் 3-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 47 வேட்பாளர்களில் 15 பேர் கோடீஸ்வரர்கள். இதில் துப்ரி தொகுதியில் போட்டியிடும் ஏஐயுடிஎப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் அதிக சொத்து மதிப்புடன் (ரூ.155 கோடி) முதலிடத்தில் உள்ளார்.
காங்கிரஸ், அசாம் கண பரிஷத் கட்சிகளைச் சேர்ந்த தலா 2 பேர், பாஜக, ஏஐயுடிஎப், போடோ மக்கள் முன்னணி, யுனைட்டெட் மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஏகம் சனாதன் பாரத் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் கோடீஸ்வரர்கள். தவிர 4 சுயேச்சை வேட்பாளர்களும் தங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் பார்பெடா தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் துலு அகமது ரூ.63 கோடி சொத்துடன் 2-ம் இடத்திலும் காங்கிரஸ் வேட்பாளர் ரகிபுல் ஹுசைன் ரூ.25 கோடி சொத்துடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.
கோக்ரஜார் (எஸ்.டி.) தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ட்ரிப்தினா ரபா மிகக் குறைவான சொத்து மதிப்பு (ரூ.25,521) கொண்டவராக உள்ளார். கோடீஸ்வர வேட்பாளர்களில் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பிஜுலி கலிதா மேதி (பாஜக), மீரா போர்தகுர் கோஸ்வாமி (காங்கிரஸ்) இவர்கள் இருவரும் குவாஹாட்டி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT