Published : 01 May 2024 02:03 PM
Last Updated : 01 May 2024 02:03 PM

‘சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதும் இல்லை’ - டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் தகவல் 

சுமன் நல்வா, டெல்லி போலீஸ் பிஆர்ஓ

புதுடெல்லி: டெல்லியில் 60க்கும் அதிகமான பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அப்பள்ளிகளில் போலீஸார் நடத்திய தீவிரமான சோதனையில், இதுவரை சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் போலீஸார் நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போலீஸ் பிஆர்ஓ சுமன் நல்வா கூறுகையில், “பல்வேறு பள்ளிகள் தங்களின் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்திருப்பதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த அழைப்புகள் வந்ததைத் தொடர்ந்து அனைத்து அழைப்புகளையும் தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீஸார் அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனாலும் இதுவரை சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அனைத்து அழைப்புகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு பகுதியிலும் தீவிரமான சோதனைகள் மேற்கொள்கிறோம் என்பதை ஊடகங்களின் மூலமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மிரட்டல் மின்னஞ்சல் வந்த நேரத்தை பார்க்கும்போது, கிட்டத்தட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே யாரோ இவ்வாறு செய்துள்ளார்கள்.

இதன்மூலம் நான் அனைவருக்கும் சொல்ல விரும்பவதெல்லாம், பெற்றோர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இதுபோன்ற அழைப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. முதலில் பாதுகாப்பு அடிப்படையிலானது, அதற்காக நெறிமுறைப்படி நாங்கள் தேவையான அனைத்து விஷங்களையும் மேற்கொள்கிறோம். இரண்டாவது விசாரணை அடிப்படையிலானது. அதனையும் நாங்கள் ஒரேநேரத்தில் மேற்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவத்துள்ளார்.

இதனிடையே, மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். இது ஒரு புரளி என்பதாகவே தோன்றுகிறது. டெல்லி போலீஸார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நெறிமுறைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள 60-க்கும் அதிகமான பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புதன்கிழமை காலையில் மின்னஞ்சலில் மிரட்டல் வந்திருந்தது. இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் இருந்து விரைவாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்தப் பள்ளிகளில் டெல்லி போலீஸார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x