Published : 01 May 2024 07:56 AM
Last Updated : 01 May 2024 07:56 AM
இடுக்கி: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 44 வயது நபர், கடந்த 2022-ம் ஆண்டு, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி நகருக்கு உணவு விடுதி ஒன்றில் பணியாற்ற சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய பெண் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். இதனால் அந்த நபரை தனது வீட்டில் தங்க அந்தப் பெண் அனுமதித்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு 15 வயதில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி உட்படசில குழந்தைகள் இருந்தன. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை மிரட்டி, அந்த நபர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
அந்த சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்து, அவரது தாயார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி கர்ப்பமாக இருந்ததால் இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தார். அந்த சிறுமியின் கர்ப்பம் இடுக்கி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலைக்கப்பட்டது.
வயிற்றில் இருந்த கருவில் டிஎன்ஏ பரிசோதனை செய்த போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நபர் என்பது உறுதி செய்யப்பட்டது. போக்சோ வழக்கில் கைதான அவருக்கு இடுக்கி மாவட்ட தேவிகுளம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிராஜுதீன் நேற்று பல பிரிவுகளின் கீழ் தண்டனை விவரங்களை அறிவித்தார்.
குற்றவாளி் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால், அவர் அதிகபட்சமாக 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார். அந்த நபருக்கு ரூ.60,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதலாக 22 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. குற்றவாளி அபராதத்தை செலுத்தினால், அதை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT