Last Updated : 29 Apr, 2018 01:11 PM

 

Published : 29 Apr 2018 01:11 PM
Last Updated : 29 Apr 2018 01:11 PM

உ.பி.யில் மாணவர்களுக்கு தமிழ் மீதான விழிப்புணர்வு வகுப்பு எடுத்த மொழி அறிஞர் கோவிந்தராஜனுக்கு பாராட்டு

உ.பி.யின் கான்பூரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீதான விழிப்புணர்வு பாடங்கள் எடுக்கப்பட்டன. இதை எடுத்த மொழி அறிஞரான எம்.கோவிந்தராஜனை உ.பி.வாசிகள் பாராட்டி கவுரவித்தனர்.

நம் நாட்டின் மாநிலங்களில் பல்வேறு மொழிகளும் கலாச்சாரங்களும் வாழ்வியலாக உள்ளன. இதைப் பற்றி பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இப்பணியை உ.பி.யின் அலகாபாத்தில் உள்ள பாஷா சங்கத்தின் பொதுச்செயலாளர் முனைவர்.எம்.கோவிந்தராஜன் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். தஞ்சை தமிழரான இவர் சென்னையில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் சுற்றுலா தலங்கள் போன்றவை பற்றி சுமார் இரண்டு மணி நேரம் விழிப்புணர்வு தரும் பாடமாக நடத்துகிறார். இதன்மூலம் அந்த மாணவர்களுக்கு தமிழ் நாடு குறித்து ஓரளவிற்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தவகையில், நேற்று சனிகிழமை கான்பூரில் பி.என்.எஸ்.டி இன்டர் காலேஜ் அரங்கில் ஏழு பள்ளிகளின் சுமார் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தமிழகம் மீதான விழிப்புணர்வு பாடங்களை நடத்தி இருந்தார். இத்துடன் தமிழகத்தை பற்றிய ஒளிபடக்காட்சிகளும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன.

உ.பி.யைச் சேர்ந்த மாணவர்கள் அதில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் பற்றி அறிந்துகொண்டனர். பலர் அதன் மொழி மற்றும் கலாச்சாரம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி தம் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டனர். திராவிடக்கட்சிகள், இந்திமொழி எதிர்ப்பு வரலாறு பற்றியும் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் கோவிந்தராஜன் கூறும்போது, ''தமிழகத்தைப் பற்றி முற்றிலும் அறியாதவர்கள் வட மாநிலங்களில் உள்ளனர். இவர்களுக்கு தமிழகத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறுவதால் அவர்கள் தமிழ்மொழியை கற்க ஆர்வம் காட்டுவதுடன், சுற்றுலாக்களில் அங்கு செல்லவும் விருப்பமும் கொள்கிறார்கள். இதுபோன்ற வகுப்புகளை எடுக்கக் கோரி மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து அழைப்பு வருகிறது'' எனத் தெரிவித்தார்.

கோவிந்தராஜனின் தமிழகம் மீதான உரை கான்பூரி பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களையும் கவர்ந்தது. இதனால், கான்பூரின் பள்ளி மாணவர்களுக்காக கோடையின் தமிழ் மொழி சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்குமுன், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் தமிழ் விழிப்புணர்வு வகுப்புகள் பாஷா சங்கம் சார்பில் நடத்தியுள்ளார்.

உதயணன் கதையை இந்தியிலும், துளசிதாசரின் ராமாயணத்தை தமிழிலும் கோவிந்தராஜன் மொழிபெயர்த்துள்ளார். இவரது தலைமையிலான குழு, பத்துபாட்டு, எட்டுத்தொகையின் 18 நூல்களையும் முதன்முறையாக இந்தியில் மொழிபெயர்த்தது, பாஷா சங்கம் சார்பில் அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும் தொடர்ந்து போராடி உபி அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x