Last Updated : 21 Apr, 2018 08:29 AM

 

Published : 21 Apr 2018 08:29 AM
Last Updated : 21 Apr 2018 08:29 AM

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் சித்தராமையா வேட்பு மனு தாக்கல்: 2 தொகுதிகளில் மனு கொடுத்தார் முன்னாள் முதல்வர் குமாரசாமி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநிலமுதல்வர் சித்தராமையாவும், மஜத‌ முன்னாள் முதல்வர் குமாரசாமியும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

கர்நாடக மாநில‌த்தில் வருகிற மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தீவிர தேர்தல் பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை அடுத்து, பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காலை தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மணிநேரத்தில், மஜத சார்பாக சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் ஜி.டி. தேவேகவுடா மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், “கர்நாடகா வில் மோடி அலை வீசவில்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் வென்று மீண்டும் முத‌ல்வராக பதவியேற்பேன். பாதாமி தொகுதியில் போட்டியிடுமாறு அங்குள்ள மக்கள் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி மேலிடம் அனுமதித்தால் நிச்சயம் வெற்றிப்பெறுவேன்” என்றார்.

இதேபோல், மஜத மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ராம்நகர் தொகுதியிலும், சென்னப்பட்டணா தொகுதியிலும் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

கர்நாடக தேர்தலில் சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி தொகுதியில் போட்டியிட சித்தராமையா விருப்ப மனு கொடுத்தார். அதை காங்கிரஸ் தலைவர் பரிசீலித்தார். ஆனால், கர்நாடக காங்கிரஸின் மற்ற மூத்த தலைவர்களும் 2 தொகுதிகளை கேட்டு ராகுல் காந்தியை நிர்பந்தப்படுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல், முதல்வர் சித்தராமையாவுக்கு சாமுண்டீஸ்வரி தொகுதியை மட்டும் ஒதுக்கியது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x