Published : 24 Apr 2024 05:15 AM
Last Updated : 24 Apr 2024 05:15 AM

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: மக்களவைத் தேர்தல் களத்தில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறதா?

பிரதமர் மோடி | கோப்புப்படம்

காங்கிரஸ் தேர்தல் தேர்தல் அறிக்கையில், "செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது. தேர்தல் நடத்தை விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் முன்பாக நம்முடைய மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, தேர்தலின்போது பேச்சுரிமை உறுதி செய்யப்படுகிறதா அல்லது பறிக்கப்படுகிறா என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது.

‘‘செல்வங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சிறுபான்மையினர், ஊடுருவல்காரர்கள் பலன் அடைவார்கள்’’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பலர் சாடை, மாடையாக பேசி வருகின்றனர். சிலர் மட்டுமே துணிச்சலாக நேர்பட பேசுகின்றனர். அவர்களது பேச்சுரிமையை பறிக்க முயற்சி செய்வது எந்த வகையில் நியாயம்?

தேர்தல் நடத்தை விதிகளின்படி வெறுப் புணர்வை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது. ஆனால் எதுவெல்லாம் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு என்பது குறித்து தெளிவான வரையறை இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சாதி, மதம், இனத்தின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அனைத்து கட்சிகளுமே சாதி, மதம், இனத்தின் அடிப்படையிலேயே பிரச்சாரம் செய்து வருகின்றன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தனிநபரை விமர்சிக்கக்கூடாது என்று ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான கள நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது.

சாதி, மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதி, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதிமீறல் கிடையாதா?

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகள் பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதோடு ஜிகாத் தீவிரவாதமும் அந்த நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் சட்டவிரோத அகதிகள் பிரச்சினை பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப், இந்த பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறார்.

மறுபுறம், ஆளும் ஜனநாயக கட்சி சட்டவிரோத அகதிகளை வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருகிறது. அமெரிக்க தேர்தல்களில் வாக்களிக்க குடியுரிமை சான்று கட்டாயமில்லை. இதை பயன்படுத்தி ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக அகதிகள் வாக்களித்து வருகின்றனர். இதே பிரச்சினையை இந்தியாவில் எழுப்பினால், அதனை மதவாத அரசியல் என்று விமர்சிக்கின்றனர்.

அசாம் உடன்படிக்கையில் இனத்தின் அடிப்படையில் குடியுரிமை முடிவு செய்யப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் இனரீதியாக கண்டறியப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

கேரளா, அசாம் மற்றும் உத்தர பிரதேசம், மேற்குவங்கத்தின் சில மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இதுகுறித்து இந்துக்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த பிரச்சினையை அப்படியே புறந்தள்ளிவிட முடியுமா?

அரசாங்கத்தின் பிடியில் இருந்து இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதை மதவாதம் என்று கூற முடியுமா?

வக்பு வாரியங்களுக்கு வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் மதவாதத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பா?

உத்தர பிரதேசம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியை அகற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இது மதவாதமா அல்லது இந்துக்களின் உரிமை மீட்பு குரலா? இதனை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தற்போதைய மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தில் கருத்து சுதந்திரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அதைவிடுத்து சிறுகுழந்தைகள் போன்று அழுதுகொண்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது அழகல்ல.

பிரதமர் மோடியின் பேச்சுரிமையை பறிக்க வேண்டும் என்று கோருவது எந்த வகையிலும் ஏற்புடையது கிடையாது. இந்த விவகாரத்தில் எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகள் பிரதமர் மோடியை வசைபாடுவதை மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதான பணியாக செய்து வந்தனர். கடந்த சில வாரங்களாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது அனல் பறக்கும் பேச்சை எதிர்க்கட்சித் தலைவர்களால் சமாளிக்க முடியாதா? பிரதமரின் தீப்பொறி பறக்கும் பேச்சை எதிர்கொள்ள முடியாமல் தேர்தல் ஆணையத்தை அணுகினால், ‘அழும் குழந்தைகள்' என்ற அடைமொழி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நிரந்தரமாகிவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x