Published : 24 Apr 2024 06:05 AM
Last Updated : 24 Apr 2024 06:05 AM

குழந்தை பராமரிப்புக்காக விடுப்பு கோர பணிபுரியும் தாய்க்கு உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோப்புப்படம்

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் புவியியல் துறையின் துணை பேராசிரியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கோரிக்கை மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.

சம்மந்தப்பட்ட பெண்ணின் மகன் தீரா பரம்பரை நோயால் பாதிக்கப்பட்டவர். பிறந்தது முதல் அந்த சிறுவனுக்கு பலவிதமான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது. இதனால் மகனை பராமரிக்க அரசு பணிபுரிபவர்களுக்கு வழக்கமாக அனுமதிக்கப்பட்ட அத்தனை விடுப்புகளையும் அந்த பெண் ஏற்கெனவே எடுத்துவிட்டார். மேற்கொண்டு விடுப்பு கோரியபோது அதனை கல்வி நிறுவனம் வழங்கிட மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி பர்திவாலா அடங்கிய அமர்வு கூறியதாவது:

பணிச்சந்தையில் பெண்களின் பங்கேற்பு என்பது ஏதோ அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அது அவர்களது உரிமை.இதனை மாநில அரசு ஒருபோதும்மறக்கலாகாது. பணிச்சந்தையில் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதுஅரசியலமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.

இதில் குழந்தை பராமரிப்புக்காக அவர்களுக்கு அளிக்கப்படும் விடுப்பும் அடங்கும். ஒருவேளை இத்தகைய பணிபுரியும் பெண்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு மறுக்கப்படுமேயானால் அவர்கள் வேலையை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதன்பொருட்டு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, இமாச்சல பிரதேசத்தின் தலைமைசெயலாளர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நலத்துறை ஆகியவற்றின் செயலாளர்கள் அடங்கிய குழு இதுதொடர்பாக வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பெண் ஊழியர்களுக்கு ஏற்றார்போல் மாநில அரசு கொள்கை வகுக்கும்படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x