Last Updated : 20 Apr, 2024 05:48 PM

21  

Published : 20 Apr 2024 05:48 PM
Last Updated : 20 Apr 2024 05:48 PM

கன்னடத்தில் பேசியதால் பெங்களூருவில் நடிகை, கணவர் மீது தாக்குதல் - ‘பாகிஸ்தானில் வாழ்கிறோமா?’ என ஆதங்கம்

பெங்களூரு: பெங்களூருவில் கன்னடத்தில் பேசியதால் நடிகையும் அவரது கணவரும் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை ஹர்ஷிகா பூனச்சா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தன் கணவர் புவன் பொன்னண்ணா மற்றும் தன் குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள பிரேசர் டவுனில் உணவு விடுதிக்கு சென்றார். அப்போது நடந்த தாக்குதல் சம்பவத்தை ஹர்ஷிகா பூனச்சா தன் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து ஹர்ஷிகா பூனச்சா கூறுகையில், “மாஸ்க் சாலையில் உள்ள உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு எங்கள் காரில் ஏறினோம். அப்போது 4 பேர் கும்பலாக வந்து, ‘இவ்வளவு பெரிய‌ வாகனம் கொண்டுவந்தால் எங்கள் மீது மோதிவிடும்’ என சத்தம் உருது மொழியில் போட்டனர். அதற்கு என் கணவர், ‘நாங்கள் இன்னும் வாகனத்தை எடுக்கவில்லை. அதற்குள் மோதிவிடும் என ஏன் சத்தம் போடுகிறீர்கள்?’ என கன்னடத்தில் கேட்டார்.

அதற்கு அவர்கள் அவரை தாக்க முற்பட்டனர். மேலும், அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது நாங்கள் கூச்சல் போட்டதால், ‘இவர்கள் கன்னடத்தில் பேசுகிறார்கள். இவர்களுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும்’ என எங்களது வாகனத்தையும் எங்களையும் தாக்கினர். மேலும் எங்களை உருது மொழியில் தரக்குறைவாக திட்டினர்.

அடுத்த சில நிமிடங்களில், அங்கே 30-க்கும் மேற்பட்டோர் குவிந்து எங்களது வாகனத்தை தாக்கினர். மேலும் கணவரை வெளியே வருமாறு மிரட்டினர். இந்தச் சம்பவத்தில் எங்கள் வாகனத்தில் இருந்த பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்தனர். அவர்கள் பெரிய கும்பலாக இருந்ததால் எங்களால் எதையும் செய்யமுடியவில்லை. நாங்கள் கன்னடத்தில் பேசியதால் அவர்கள் கோபமடைந்து, அதனை வைத்து எங்களை தாக்க முயற்சித்தினர்.

இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன். போலீஸார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் போலீஸாரும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவத்தை பார்க்கையில் எனக்கு கர்நாடகாவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் வசிக்கிறோமா என சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பெங்களூரு போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

ஹர்ஷிகா பூனச்சாவின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்துள்ள நிலையில், சிலர் பிரேசர் டவுனில் தங்களுக்கும் இதுபோல நடந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x