Published : 18 Apr 2024 02:38 PM
Last Updated : 18 Apr 2024 02:38 PM

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக புகார்: ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

காசர்கோடு: கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒருமுறை பொத்தான் அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலில் கேரளாவில் இம்மாதம் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காசர்கோடு சட்டமன்ற பகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. விவிபாட் இயந்திரத்துடன் நடந்த மாதிரி வாக்குப்பதிவில், ஒருமுறை பொத்தான் அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக, இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக இருப்பதாகவும் புகார்கள் தெரிவித்ததுடன், உடனடியாக அதனை மற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோல் இரட்டை வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திரம் மூலம் சரிபார்க்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது வாதிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகலாம். அதேபோல், அவற்றில் மென்பொருள் மூலம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளைப் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்குகளை உறுதி செய்ய விவிபிஏடி சீட்டுகளை அவர்கள் பெற அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.

அப்போது காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவில் ஒருமுறை பொத்தான் அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக எழுந்த புகார்களையும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மேற்கோள்காட்டினார். அதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கிடையே, மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி இந்த வழக்கில் விளக்கம் அளித்தனர். அதில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னதாக முன்பு பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு விடும். ஏதேனும், ஒரு சில இடங்களில் பழைய வாக்குகள் கணக்காக காண்பிக்கும். அதுவும் மாதிரி வாக்குப்பதிவின் போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும். மேலும், மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது உள்ளதா என்பதும் சரிபார்க்கப்படும். இவை அனைத்தும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.

காசர்கோடு சம்பவத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என்பது உண்மை இல்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தி. அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x