

புதுடெல்லி: என்விரானிக்ஸ் என்ற அறக்கட்டளையின் செயல்பாடுகளை வருமான வரித்துறை கடந்த 2022-ம் ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தியது. இதையடுத்து அதன் வருமான வரி கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அந்த அறக்கட்டளை மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், வருமான வரித்துறை இவ்வழக்குத் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், “என்விரானிக்ஸ் அறக்கட்டளைக்கான நிதியில் 90% வெளிநாட்டுக்கு நிறுவனங்கள் மூலம் வந்துள்ளன. இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை முடக்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிதியைப் பயன்படுத்தி, உள்கட்டமைப்பு உட்பட பொதுத்திட்டங்களுக்கு எதிராக போராடுவதற்காக பணம் கொடுத்து போராட்டக்காரர்களை அந்த அறக்கட்டளை களமிறக்கியுள்ளது. இவ்வாறாகவே, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களுக்கு அந்த அறக்கட்டளை ஐசிஐசிஐ வங்கி மூலம் தலா ரூ.1250 வழங்கிஉள்ளது.
நிலக்கரி நிறுவனங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த, ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பு என்விரானிக்ஸ் அறக்கட்டளைக்கு நிதி வழங்கியுள்ளது தெரிய வந்திருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.