Published : 21 Apr 2018 11:58 AM
Last Updated : 21 Apr 2018 11:58 AM

நாடுமுழுவதும் போர்க்கோலம்: பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை - அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு?

இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற குற்றத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதற்காக அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபகாலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார், அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால், மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்தும், முறையான நீதி வழங்கக்கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, கண்டனம் தெரிவித்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், மகள்களுக்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தனது காஷ்மீர் பயணத்தில் போது ஜம்முவில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடுமையாக கண்டனத்தைப் பதிவு செய்தார். சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே குழந்தைகள், பெண்கள் பலாத்காரம் சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் சம்பவங்கள் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இன்று அவரது தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என தெரிகிறது.

மத்திய அமைச்சர் மேனகா உள்ளிட்டோர் சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுபோலவே, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x