Published : 10 Apr 2024 04:20 AM
Last Updated : 10 Apr 2024 04:20 AM

மக்களவை முதல் கட்ட தேர்தலில் 8% பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பெண் வேட்பாளர்கள்

கோப்புப் படம்

புதுடெல்லி: ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற விருக்கும் 18-வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் 8% பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடவிருக் கின்றனர்.

மத்திய அரசு நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியது. ஆனால், அந்த சட்டம் 2029-ம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வரும்.

இந்நிலையில், தற்போது 18-வது மக்களவை தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102தொகுதிகளில் மொத்தம் 1625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 1,491 பேர் ஆண்கள். ஆனால், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 134 அதாவது 8% மட்டுமே.

அந்தமான், நிகோபார் தீவுகளில் மொத்தம் களம் காணும் 12 வேட்பாளர்களில் இருவர் மட்டுமே பெண்கள். அருணாச்சல பிரதேசத்தில் போட்டியிடும் 14 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே பெண். அசாமில் 35 வேட்பாளர்களில் 4 பேர் பெண்கள், பிஹாரில் 38 வேட்பாளர்களில் 3 பேர் பெண்கள், மத்திய பிரதேசத்தில் 88 வேட்பாளர்களில் 7 பேர் பெண்கள், மகாராஷ்டிராவில் 97 வேட்பாளர்களில் 7 பேர் பெண்கள்,மேகாலயாவில் 10 வேட்பாளர்களில் இருவர் பெண்கள், மிசோரமில் 6 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களில் 3 பேர்பெண்கள், ராஜஸ்தானில் 114 வேட்பாளர்களில் 12 பேர் பெண்கள், சிக்கிம் மாநிலத்தில் 14 வேட்பாளர்களில் ஒரே ஒருவர் மட்டுமே பெண், உத்தர பிரதேசத்தின் 80 வேட்பாளர்களில் 7 பேர் பெண்கள், உத்தராகண்ட் மாநிலத்தில் 55 வேட்பாளர்களில் 4 பேர் பெண்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் 37 வேட்பாளர்களில் 4 பேர் பெண்கள் என்கிற ரீதியில் களம் இறங்கியுள்ளனர்.

சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவுகள், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் ஒரு பெண்கூட இல்லை.

அதேநேரத்தில் உச்சபட்ச எண்ணிக்கையிலான வேட்பாளர் கள் போட்டியிடும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அவர்களில் 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x