Published : 09 Apr 2024 08:22 PM
Last Updated : 09 Apr 2024 08:22 PM

“சிறுபான்மையினருக்கு ஆர்எஸ்எஸ் குறி!” - ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடல் விவகாரத்தில் பினராயி தாக்கு

பினராயி விஜயன் | கோப்புப்படம்

கொல்லம்: கேரளாவில் தி கேரளா ஸ்டோரி’ திரையிடல் விவகாரம் தொடர்பாக எதிர்வினையாற்றியுள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “சிறுபான்மையினரை ஆர்எஸ்எஸ் குறிவைக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றவரை தூண்டி விடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பொறியில் சிக்கிக் கொண்டு நாம் சங்பரிவாரின் ஒரு பகுதியாக மாறிவிடக் கூடாது. அவர்கள் இதைக் (தி கேரளா ஸ்டோரி) கேரளாவின் கதை என்கின்றனர். கேரளாவில் எங்கே அப்படி நடந்தது? அவர்கள் போலியான கொள்கைகள், பொய்களைப் பரப்பி இந்த நிலத்தை அவமதிக்கின்றனர்.

கேரளாவை மதவெறி நிறைந்த பூமியாக சித்தரிக்க முயல்கிறார்கள். கேரளா சகோதரத்துவத்தின் நிலம். சாதி, மத பேதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் இடம் இது" என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பின்னணி: கடந்த ஆண்டு மே மாதம் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அடசர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாகச் சித்தரித்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், மத மோதலை ஏற்படுத்தும் கேரளா ஸ்டோரி படத்தை தேர்தல் நேரத்தில் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் வெளியிட்டதற்கு கேரள அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே, இடுக்கி மறை மாவட்ட பேராயர் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த வாரம் (ஏப்ரல் 4) திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இடுக்கி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை பிரின்ஸ் காரக்காட் செய்திருந்தார். லவ் ஜிகாத்துக்கு எதிராக மாணவர்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் படத்தை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டியதாக அவர் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் எதிர்வினை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x